மொடக்குறிச்சி கிளை நூலக சுவற்றில் தேச தலைவர்கள் படம்

மொடக்குறிச்சி, ஆக.24: மொடக்குறிச்சியில் செயல்பட்டு வரும் கிளை நூலகத்தின் சுவற்றில் வாசகர்களை கவரும் வகையில் தலைவர்களின் படங்களை வரைந்து அவர்களின் பொன்மொழிகளை எழுதி உள்ளனர்.

 மொடக்குறிச்சியில் கடந்த 1958ம் ஆண்டு முதல் அரசு பொது கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 1990ம் ஆண்டு நூலகத்திற்கு என அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் கட்டிடம் கட்டப்பட்டது. இந்ந நூலகத்தில் தற்போது 41 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் ஏழு ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். தினசரி 100க்கும் மேற்பட்ட வாசகர்கள் படித்து வருகின்றனர். தினசரி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வருகிறது. மொடக்குறிச்சி தாலுகாவில் கிளை நூலகம் மற்றும் ஊர்புற நூலகம் என 12 நூலகங்கள் இந்த மொடக்குறிச்சி கிளை நூலகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் மொடக்குறிச்சி கிளை நூலகத்தின் முன்பக்கம் மற்றும் பின்பக்க சுவர்கள் முழுவதும் தலைவர்களின் படங்கள் வரைந்து அதற்கு கீழ் அவர்களின் பொன்மொழிகள் எழுதப்பட்டுள்ளது. இதில் இந்திய நூலகத்தந்தை எஸ்.ஆர் ரங்கநாதன், திருவள்ளுவர், மகாத்மா காந்தி, டாக்டர் ஏபிஜே.அப்துல்கலாம், பாரதியார், டாக்ர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களின் படங்கள் வரையப்பட்டுள்ளது. மொடக்குறிச்சி கிளை நூலகத்திற்கு எதிரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அருகிலேயே பெண்கள் மேல்நிலைப்பள்ளி, போலீஸ் ஸ்டேஷன், எம்எல்ஏ., அலுவலகம் பேரூராட்சி, மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் செல்லும் வழி என்பதால் தினசரி ஏராளமான பொதுமக்கள் அவ்வழியாக சென்று வருகின்றனர். நூலகத்தின் சுவற்றில் வண்ண வண்ணக் கலரில் தலைவர்களின் படங்கள் வரைந்துள்ளதால் வியந்து பார்த்து பொன்மொழிகளை படித்து செல்கின்றனர்.

இதுகுறித்து கிளை நூலகர் ரகுபதி கூறும்போது, மொடக்குறிச்சி கிளை நூலக கட்டிடம் 32 ஆண்டுகள் ஆகி விட்டதால் சுவர்கள் அழுக்கு படிந்து காணப்பட்டது. புதிதாக பெயிண்ட் அடிப்பதற்கு பதிலாக தலைவர்களின் படங்களை வரையலாம் என எண்ணி அதற்காக பஞ்சலிங்கபுரம் உழவர் மன்றம், தன்னார்வலர்கள், வாசகர் வட்டம், மொடக்குறிச்சி பேரூராட்சி தலைவர் செல்வாம்பாள் சரவணன் உள்ளிட்டவர்கள் உதவியோடு இந்திய நூலகத்தந்தை எஸ்.ஆர் ரங்கநாதன், திருவள்ளுவர், மகாத்மா காந்தி, டாக்டர் ஏபிஜே.அப்துல்கலாம், பாரதியார், டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் படங்கள் வரைந்து அவர்களின் பொன்மொழிகளை எழுதினோம். இது நூலகத்திற்கு வரும் வாசகர்கள் மற்றும் பொதுமக்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளது, என கூறினார்.

Related Stories: