ஊரக வளர்ச்சித்துறையினர் கன்டன ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஆக. 24: ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்க மாவட்ட தலைவர் ரவிசந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர் பாஸ்கர்பாபு பங்கேற்று கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில், முன்னாள் மாநில தலைவர் மு.சுப்பிரமணியன் மீது, கடந்த அரசு எடுத்த பழி வாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்து, அவர் பணி ஓய்வில் செல்ல அனுமதிக்க வேண்டும். வளர்ச்சி துறையில் திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், காலம் கடந்த ஆய்வுகள், விடுமுறை நாட்களிலும், இரவு நேரங்களில் நடக்கும் ஆய்வு போன்றவற்றை கைவிட வேண்டும். பஞ்சாயத்து செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்.

அவர்களுக்கு மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்ட கணினி இயக்குனர்களுக்கு, இளநிலை உதவியாளர்களுக்கான ஊதியம் வழங்கி, பணி வரன்முறை செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: