நாச்சியார்கோயில் அடுத்த திருப்பந்துறை பிரணவேஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கும்பகோணம், ஆக.23: கும்பகோணம் அருகே நாச்சியார்கோயில் அடுத்துள்ள திருப்பந்துறை மங்களாம்பிகா சமேத பிரணவேஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கும்பகோணம் அருகே நாச்சியார்கோயில் அடுத்துள்ள திருப்பந்துறையில் அமைந்துள்ள மங்களாம்பிகா சமேத பிரணவேஸ்வர சுவாமி திருக்கோயில். பழமையும், பெருமையும் வாய்ந்த சிவதலமாகும். இத்தலம் துக்காச்சி, கூகூர், திருநரையூர் மற்றும் திருநாகேஸ்வரம் ஆகிய நான்கு சிவதலங்களுக்கும் மத்தியில் அமைந்துள்ள பெருமை கொண்டது. இத்தலத்தை போற்றி திருஞானசம்மந்தர் பாடியுள்ளார். முருகப்பெருமான், பிரம்மனை ஓம்காரப்பொருள் கேட்டமையால் ஏற்பட்ட முகத்துவம் (ஊமை) நிவர்த்தி செய்தவரும், முருகப்பெருமானால் பூஜிக்கப்பட்ட பெருமையும் கொண்டது இத்தலம். மேலும் பரமனை அடைய தவமுற்று மங்களம் உண்டாகுக என அனுகிரகம் பெற்றமையால் அன்னைக்கு இத்தலத்தில் மங்களாம்பிகை என பெயர் நிலைக்கப் பெற்றது.

மேலும் அவதூர் மாமுனிவருக்கு ஏற்பட்ட குஷ்டரோகம் நீங்க, கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள மங்கள தீர்த்தத்தில் நீராடி சுவாமி தரிசனம் செய்த பிறகு திவ்ய தேஜஸ்மயமான சரீரத்தை பெற்றார் என்பதும் வரலாறு. இத்தகைய பெருமை கொண்ட சைவத்திருத்தலத்தில், சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு, பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவு பெற்றது. அதனைத்தொடர்ந்து விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கிராமசாந்தி, லட்சுமி ஹோமம், வாஸ்து ஹோமம், புனிதநீர் எடுத்து வருதல் ஆகியவற்றுக்கு பிறகு, கடந்த 20ம் தேதி, கும்ப அலங்காரம், கும்பஸ்தாபனம் ஆகியவற்றுடன் முதல்யாக பூஜை சர்வசாதகம் திருக்கண்ணங்குடி பாலாமணி சிவாச்சாரியார் தலைமையில் தொடங்கியது. நாள்தோறும் வேதபாராயணம், தேவார இன்னிசை ஆகியவையும் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று 4ம்கால யாகசாலை பூஜை நிறைவாக, மகா பூர்ணாஹூதியும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. பிறகு மங்கல வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடும் அதனை தொடர்ந்து மகாகும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories: