அரியலூர் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலி: கோயிலுக்கு சென்ற இடத்தில் பரிதாபம்

ஆண்டிமடம், ஆக. 23: அரியலூர் அருகே கோவில் வழிபாட்டிற்கு சென்றிருந்த இடத்தில் குளத்தில் மூழ்கி சிறுவன் பரிதாப பலியானார். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அண்ணங்கார குப்பம் வன்னியர் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். கொத்தனார். இவருக்கு இரண்டு மகன்கள். இந்நிலையில் நேற்று ஆண்டிமடம் அருகே உள்ள சூரக்குழி கிராமம் ரெட்ட பள்ளம் அய்யனார் கோயிலில் உறவினரின் குலதெய்வ வழிபாட்டிற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார். மூத்த மகனான அஜய் (8 ) குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தவர் திடீரென்று காணவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

பின்னர் கோயிலின் அருகே உள்ள குளத்தில் மிதந்த படி அஜய் கிடந்துள்ளான். அஜய் சடலமாக கிடந்ததை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். அங்கிருந்தவர்கள் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அஜய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோயில் வழிபாட்டிற்காக வந்த இடத்தில் தனது மகனை பறிகொடுத்த வேல்முருகன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories: