×

மாறிப்போன சந்தை வாய்ப்புகளால் அழிந்து வரும் ஆயத்த ஆடை தயாரிப்பு தொழில்: கம்பத்தில் சிப்காட் ஜவுளிப் பூங்கா அமைக்க கோரிக்கை

கம்பம்: மாறிப்போன சந்தை வாய்ப்புகளால் கம்பம் பகுதியில் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் அழிந்து வருகின்றன. இவைகளை மீட்க, ஜவுளிப்பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டம், கம்பம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் 200க்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை (ரெடிமேட் ஆடைகள்) தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வந்தன. இதன் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர். இங்கு தயாரித்த ரெடிமேட் ஆடைகளில் 70 சதவீதம் கேரளாவில் உள்ள ஜவுளி கடைகளுக்கும், 30 சதவீதம் தமிழகத்தில் உள்ள ஜவுளி கடைகளுக்கும் சப்ளை செய்து வந்தனர். இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த ஜவுளிக் கடைக்காரர்கள் எர்ணாகுளத்திலும், கர்நாடாக மாநிலம், பெங்களூரிலும் ரெடிமேட் ஆடைகளை கொள்முதல் செய்ய தொடங்கினர். இவ்வாறு மாறிப்போன சந்தை வாய்ப்புகளால், கம்பம் பகுதி ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் படிப்படியாக வீழ்ச்சி அடைய தொடங்கின. தற்போது சுமார் 40 நிறுவனங்களே இயங்கி வருகின்றன. இதனால், தொழிலாளர்கள், நிறுவன உரிமையாளர்களின் வாழ்வாதாரம் முடங்கிப் போயுள்ளது.ஜவுளி சந்தை அமைக்க கோரிக்கை: ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிலை மீட்க மாவட்டத்தில் சிப்காட் அமைத்து, அந்த வளாகத்தில் ஜவுளி சந்தை அமைக்க வேண்டும். அந்த தொழிற்பேட்டைக்குள் விற்பனையும் நடைபெற வேண்டும். இதன்மூலம் ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதற்கு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து கம்பம் வட்டார ஆயத்த ஆடை தயாரிப்பாளர் சங்க தலைவர் டி.ராஜா கணேசன் கூறியதாவது: கம்பம் பகுதியில் 2015 வரை 200 ரெடிமேட் ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தன. இவைகள் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெற்று வந்தனர். இந்நிலையில் மாறிப்போன சந்தை வாய்ப்புகளால் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டன. நிறுவன ஊழியர்கள் ஏலத்தோட்டங்களுக்கு வேலைக்கு செல்கின்றனர். எனவே, மாவட்டத்தில் சிப்காட் ஜவுளி பூங்கா அமைத்து கொடுத்தால், பெண்களுக்கு பயிற்சி கொடுத்து வேலை வாய்ப்பை பெருக்கலாம். மேலும் சிப்காட்டில் வணிக வளாகம் அமைந்தால் கேரள வியாபாரிகளும், தமிழக வியாபாரிகளும் நேரிடையாக கொள்முதல் செய்வார்கள். திருப்பூரைப் போன்று கம்பம் ரெடிமேட் ஆடைகளுக்கும் பெயர் கிடைக்கும்’ என்றார்….

The post மாறிப்போன சந்தை வாய்ப்புகளால் அழிந்து வரும் ஆயத்த ஆடை தயாரிப்பு தொழில்: கம்பத்தில் சிப்காட் ஜவுளிப் பூங்கா அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chipcott Textile Park ,Gamba ,Gampam ,Gampa ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனை...