×

மகான்களால் பெருமை பெற்ற புண்ணிய பூமி எட்டயபுரம்

எட்டயபுரம், ஆக. 23:  எட்டயபுரம் என்றால் சட்டென ஞாபகத்திற்கு வருபவர் ‘அச்சமில்லை அச்சமில்லை உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை’ என்று வெள்ளைய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக எழுத்தை ஆயுதமாக்கி மக்களிடம் வீரத்தை உருவாக்கிய மகாகவி பாரதி, எட்டயபுரம் அரசவையை அலங்கரித்த அரசவை புலவர் கடிகைமுத்து புலவர், அவரது மாணவர் சீறாப்புராணம் தந்த உமறுப்புலவர், பஞ்சபூதங்களையும் கர்நாடக சங்கீதத்தால் தன்வயப்படுத்திய முத்துசுவாமி தீட்சிதர், அஷ்டயோகத்திலும் சிறந்து விளங்கி எட்டயபுரம் அரண்மனைக்குள்ளேயே ஜீவசமாதியான தவசி தம்பிரான், அவரை தொடர்ந்து வந்த சித்தபுருஷர்கள் கீரை புசித்தான், காளீசநாதர் என எண்ணற்ற மகான்களையும் சுதந்திர போராட்ட வீரர்களின்
சுவாசக்காற்றை தாங்கி நிற்கும் எட்டயபுரம் 1567ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
 
விஜயநகரப் பேரரசிற்கு உட்பட்ட சந்திரகிரியை எட்டப்ப மன்னர்கள் ஆண்டு வந்தனர். அப்போது விஜயநகர பேரரசர் அன்னதேவராயர் மீது முகமது அலாவுதீன் படையெடுத்தார். இந்த தாக்குதலை சமாளிக்க முடியாத குமாரமுத்து எட்டப்பன் தனது பரிவாரங்களுடன் சந்திரகிரியை விட்டு வெளியேறி மிகுந்த சிரமத்திற்குபின் மதுரை வந்தடைந்தனர். அப்போது மதுரையை ஆண்ட அதி வீரபராக்கிரம பாண்டியன் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து காவல் வேலை வழங்கினான். இந்நிலையில் கங்கை கொண்டானை ஆட்சி செய்த ஜெகவீரராம பாண்டியன் இளசை நாட்டு மறவர்களை தன்னால் அடக்க முடியவில்லை என பாண்டிய மன்னனுக்கு தகவல் அனுப்பினார். அவருக்கு உதவி செய்ய பாண்டிய மன்னன் குமாரமுத்து எட்டப்பனையும் அவரது படைவீரர்களையும் அனுப்பி வைத்தார்.
இளசை மறவர்களை அடக்குவதற்கு உதவி செய்த எட்டப்ப மன்னருக்கு ஜெகவீரராம பாண்டியன் இளசை, நடுவிற்பட்டி, ராமனூத்து, வாலன்பட்டி, ஈரால், சுரைக்காய்பட்டி, பாண்டவர் மங்களம், பெத்தராஜபுரம் உள்ளிட்ட எட்டு கிராமங்களை வழங்கினார்.

இளசையிலிருந்து (எட்டயபுரத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இளம்பூவனம் தான் அப்போதைய இளசைநாடு) குமாரமுத்து எட்டப்பனுக்கு பின்னால் 5 எட்டப்ப மன்னர்கள் இளசை என்ற இளம்புவனத்திலிருந்து ஆட்சி செய்தனர். பின்னர். 1567ம் ஆண்டு எட்டயபுரம் என்ற புதிய நகரத்தை உருவாக்கினர். அது முதல் கலைகள், கல்வி, குடிநீர் தெப்பக்குளங்கள் என அனைத்து வகையிலும் மக்கள் வாழ்க்கையை உயர்த்தி பிடித்தவர்கள் எட்டப்ப மன்னர்கள்.  சந்திரகிரி தொடங்கி எட்டயபுரம் வரை 41 தலைமுறையாக ஆட்சி புரிந்து வந்த எட்டயபுரம் ஜமீனை 26.09.1954ல் அரசு தனது நேரடிப்பார்வையில் எடுத்துக் கொண்டது. 1567 தொடங்கி 2022 வரை எட்டயபுரம் மக்கள் மன்னர்கள் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளது மன்னர்கள் மக்கள் மீது வைத்திருந்த அன்பை வெளிப்படுத்துகிறது.

எட்டயபுரத்திற்கு வயது 456 இளசையிலிருந்து ஆட்சி புரிந்து வந்த 20வது மன்னரான குமார எட்டப்பன் 1567ம் ஆண்டு இளம்பூவனத்திலிருந்து 3 கி,மீட்டர் கிழக்கே  சிவன்கோவில் மற்றும் கோட்டை கொத்தளங்களை கட்டி தங்களது பரம்பரை பேரான எட்டப்பன்
என்பதை குறிக்கும் வகையில் எட்டயபுரம் என்று பெயரிட்டார். தற்போது எட்டயபுரத்திற்கு வயது 456 ஆகிறது.

Tags : Ettayapuram ,
× RELATED எட்டயபுரம் அருகே லாரி ஏற்றி மாமனார்...