×

மின்சார சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மின் வாரிய அலுவலகள் முன்பு மின்சார சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் நேரு, ரமேஷ், தர், சௌந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் வீடுகள், விவசாயம், சிறு தொழில் மற்றும் கை நெசவு தொழிலாளர்களுக்கு இலவசமாக மின்சாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும்.  தமிழ்நாடு அரசு வரும் செப்டம்பர் முதல் மின் கட்டண உயர்வினை 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை உயர்த்தி பொதுமக்களிடம் கருத்து கேட்டுள்ளது.

மேலும் கொரோனா முடக்கம் காரணமாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் முழுவதுமாக மூடப்பட்டு விட்டன. அதன்பின் சற்று மூச்சு விடக்கூடிய சூழலில் அத்தியாவசிய பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. பண வீக்கம் விகிதம் அதிகரித்துள்ள நிலையில் இந்த மின் கட்டண உயர்வு மக்களை பெருமளவில் பாதிக்கும். மின்சாரம் மக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமாகி விட்ட நிலையில் மக்கள் நல அரசு இந்த மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
செங்கல்பட்டு: மின் கட்டண உயர்வுக்கு எதிராகவும், மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், மாதாமாதம் மின் கட்டணத்தை வசூலித்திட வலியுறுத்தியும், ஒன்றிய அரசின் புதிய மின்சார சட்டத்தை கைவிட வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டக்குழு சார்பில், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் எதிரில், நேற்று மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதற்கு, செங்கல்பட்டு பகுதி செயலாளர் கே.வேலன் தலைமை தாங்கினார்.

கோரிக்கைகளை விளக்கி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.அரிகிருஷ்ணன், கே.வாசுதேவன், கே.சேஷாத்திரி உள்ளிட்ட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் பேசினார். முன்னதாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் மின்சார கட்டண உயர்த்தக்கூடாது என்கிற கருத்தை தெரிவிக்கின்ற வகையில் கடந்த 11ம் தேதியன்று கூவத்தூர், மதுராந்தகம், கருங்குழி, எல்.எண்டத்தூர், புக்கத்துரை, செம்பாக்கம், மறைமலைநகர், திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தி பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களை செங்கல்பட்டு மின்வாரிய மேற்பார்வை செயற்பொறியாளரிடம் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.ஆறுமுக நயினார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.அரிகிருஷ்ணன், கே.வாசுதேவன், கே.சேஷாத்திரி, செங்கல்பட்டு பகுதி செயலாளர் கே.வேலன் உள்ளிட்ட பலர் வழங்கினர். மேலும், மின் கட்டண உயர்வுக்கு எதிராக பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களை மின்சார ஒழுங்குமுறை ஆணையருக்கு அனுப்பிவைக்குமாறு கட்சியின் நிர்வாகிகள் மேற்பார்வை பொறியாளரிடம் வலியுறுத்தினர்.

Tags : Communist Party ,
× RELATED பொன்முடி அவர்களுக்கு உடனடியாக பதவி...