உலக யானைகள் தினத்தையொட்டி நெல்லையப்பர் கோயிலில் மாணவர்களுக்கு யானைகள் விழிப்புணர்வு பயிலரங்கம்

நெல்லை: உலக யானைகள் தினத்தையொட்டி அகத்தியமலை இயற்கை வளம் காப்புமையம், அரசு அருங்காட்சியகம், நெல்லை நீர்வளம் அமைப்பு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சிற்ப யானைகள் குறித்த கதைகள் என்ற தலைப்பில் பயிலரங்கம் நடந்தது. உலக யானைகள் தினமாக ஆக.12ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி யானைகளை பாதுகாப்பதும், யானைகள் குறித்து பொதுமக்கள், குழந்தைகள் அறிந்து கொள்வதுமாகும். ‘வனத்திற்குள் திரும்பு’ என்ற ஆங்கில படத்தை வில்லியம் சாட்னர் என்பவர் எடுத்தார். இப்படத்தில் தனியார் வளர்க்கும் யானையை மீண்டும் அதன் வாழ்விடமான வனத்தில் கொண்டு சேர்ப்பது படமாகும். இப்படம் 2012 ஆக.12ல் வெளியானது. அதுமுதல், ஆக.12ம் தேதியை உலக நாடுகளில் உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

யானைகள் சிறியவர்கள், முதல் பெரியவர்கள் வரை நேசிக்கும் உயிரினமாகும். உலக மக்களின் கலாசாரத்தில் யானைகளுக்கு என்று ஒரு தனி சிறப்பிடம் உள்ளது. ஆனால் சமீபகாலமாக மனிதர்கள் காட்டில் ஊடுருவியதாலும், அதன் வாழ்விடம் அழிக்கப்பட்டதாலும், வலசை பாதைகள் அடைக்கப்பட்டதாலும் யானைகள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றன. பண்டைய இலக்கியங்களில் யானைகள் வாழ்க்கை, மனிதர்களுடனான தொடர்பு ஆகியவை குறித்து அதிகளவு பேசப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோயில்களில் யானைகள் சிற்ப வடிவில் உள்ளன. இத்தகைய யானை சிற்பங்கள் ஒவ்வொன்றும் அதற்கான செய்தியை தாங்கி உள்ளன. இச்செய்திகளை உலக யானைகள் தினத்தில் மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதின் மூலம் யானைகளை பாதுகாக்க முடியும்.

இதற்கான முயற்சியில் அகத்தியமலை இயற்கை வளம் காப்பு மையம், நெல்லை அரசு அருங்காட்சியகம், நெல்லை நீர்வளம் அமைப்பு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணைந்து சிற்ப யானைகள் கூறும் கதைகள் என்ற கலந்துரையாடலை நெல்லையப்பர் கோயிலில் நேற்று நடத்தியது. நெல்லையப்பர் கோயில் யானைகள் தாங்கி நிற்கும் கல்தூண்கள், மணி மண்டபம், இசை தூண்களில் கூட யானைகளில் சிற்பங்கள் காணப்படுகின்றன.

இக்கோயிலில் சுந்தமூர்த்தி நாயனார் வெள்ளை யானை மீது கயிலை செல்லும் காட்சி உள்ளிட்ட கல்சிலைகள் உள்ளன. இதுகுறித்து வரலாற்று ஆசிரியர்கள் தென்னன் மெய்யம்மன், கோமதிசங்கர் ஆகியோர் கதைகளாக எடுத்துரைத்தனர். மாணவர்களுக்கு யானைகள் படம் வரைதல் பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அகத்திய மலை மக்கள் சார் இயற்கை வளகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி, பேரிடர் மேலாண்மை துறை தாசில்தார் செல்வம் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் காந்திமதி அம்பாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புஷ்பலதா வித்யா மந்திர் மற்றும் அமிர்தா வித்யாலயா பள்ளிகள் உள்பட 60 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: