தென்காசி, அம்பையில் ஆடித்தபசு திருவிழா கோலாகலம்

தென்காசி, ஆக.11: தென்காசி, அம்பை சங்கரநாராயண சுவாமி, கோமதி அம்பாள் கோயில்களில் ஆடித்தபசு காட்சி நேற்று விமர்சையாக நடந்தது. தென்காசி யானைப்பாலம் அருகிலுள்ள மேல சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 1ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் தினமும் ஒவ்வொரு கட்டளைதாரர்களால் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள், சுவாமி அம்பாள் வீதிஉலா நடந்தது. முக்கிய நிகழ்வாக தபசு காட்சி நேற்று மாலையில் தெற்கு மாசி வீதியில் கோமதி அம்மனுக்கு சுவாமி சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. பூஜைகளை கோமதிநடராஜ பட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்தினர். முன்னதாக மும்முறை மாலை மாற்றும் வைபவமும், இரவில் சுவாமி, அம்பாள் வீதிஉலாவும் நடந்தது.

இதில் கோயில் மணியம் செந்தில்குமார், திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவர் இலஞ்சி அன்னையாபாண்டியன், திமுக பாலாமணி, தங்கபாண்டியன், குமார், பேரூர் செயலாளர்கள் மேலகரம் சுடலை, குற்றாலம் குட்டி, வீட்டு வசதி சங்க தலைவர் சுரேஷ், அதிமுக நகர செயலாளர் சுடலை, முத்துக்குமாரசாமி, மாரிமுத்து, கசமுத்து, சிந்தாமணி காமராஜ், பூக்கடை சரவணன், பாஜக மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார், நகர தலைவர் மந்திரமூர்த்தி, துணை செயலாளர் கருப்பசாமி, ராஜ்குமார், கவுன்சிலர்கள் சங்கரசுப்பிரமணியன், லட்சுமணபெருமாள், சுனிதா, மகேஸ்வரன், காங்கிரஸ் மாடசாமிஜோதிடர், ஆறுமுகம் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இன்று 11ம்தேதி மாலை 6 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் முருகன், கட்டளைதாரர்கள், திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இதேபோல் கீழ சங்கரன்கோவிலில் ஆடிதபசு காட்சி திருவிழா மட்டப்பா தெருவில் நடந்தது. இதிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஎஸ்பி மணிமாறன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் செய்திருந்தனர்.

அம்பை: அம்பை சின்ன சங்கரன்கோவில் கோமதியம்பாள் சமேத சங்கரலிங்கசுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா ஜூலை 31ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் வீதிஉலா நடந்தது. 10ம் நாளான 9ம்தேதி காலை 10.30 மணிக்கு தீர்த்தவாரியும் 11ம் நாளான நேற்று ஆடித்தபசை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், காலை 6.30 மணிக்கு அம்பாள் வெள்ளிச்சப்பரத்தில் தபசுக்கு எழுந்தருளல் நடந்தது. மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு சங்கரநாராயணராக தரிசனம் ெகாடுத்ததையடுத்து 6.30 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு ரிஷப வாகனத்தில் சங்கரலிங்கராக காட்சி கொடுத்தார். நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், அம்பை நகர்மன்ற தலைவர் பிரபாகரபாண்டியன், கவுன்சிலர்கள் மற்றும் அம்பை, விகேபுரம், கல்லிடைக்குறிச்சி சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தரிசித்தனர். இரவு 8 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அம்பை டிஎஸ்பி பிரான்சிஸ் தலைமையில் போலீசார், ஊர்க்காவல் படையினர், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இன்று (11ம்தேதி) இரவு 7.30 மணிக்கு சங்கரலிங்க சுவாமி தெப்பத் திருவிழாவும், 12ம்தேதி இரவு 7.30 மணிக்கு அகஸ்தீஸ்வரர் சுவாமி தெப்பத் திருவிழாவும், 10 மணிக்கு சுவாமி, அம்பாள் வீதி உலாவும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை சங்கரலிங்கசுவாமி கோயில் அறங்காவலர் முருகசுவாமிநாதன், அகஸ்தீஸ்வரர் கோயில் அறங்காவலர் சபாபதி ஆகியோர் தலைமையில் நிர்வாகக் குழுவினர் செய்து வருகின்றனர்.

Related Stories: