டிஎஸ்எப் அணி தலைமையிலான தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல நிர்வாகத்துக்கு ஐகோர்ட் அனுமதி

தூத்துக்குடி, ஆக. 10: தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல நிர்வாகம், முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட டிஎஸ்எப் அணி தலைமையில் நடைபெற உயர்நீதி மன்ற பெஞ்ச்  உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்துக்கான நிர்வாகிகள் தேர்தல், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி நடைபெற்றது. தேர்தலின் முடிவில், டிஎஸ்எப் அணி சார்பில் போட்டியிட்ட குருவானவர் தமிழ்ச்செல்வன் திருமண்டல உப தலைவராகவும், குருவானவர் இம்மானுவேல் வான்ஸ்றக் குருத்துவ செயலராகவும், நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் லே செயலராகவும், மோகன்ராஜ் அருமை நாயகம் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி தேர்தலை ரத்து செய்வதாக அப்போதிருந்த பேராயர் தேவசகாயம் எதிரணியினருக்கு ஆதரவாக அறிவிப்பு வெளியிட்டார். முறையாக நடைபெற்ற திருமண்டல தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்த  பேராயர் மீது புதிய நிர்வாகிகள், தென்னிந்திய திருச்சபை தலைமையிடமான சினாட்டில் புகார் தெரிவித்தனர். ஆனாலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3ம்தேதி மறுதேர்தல் நடத்தப்படும் என்ற மற்றொரு அறிவிப்பை அப்போதைய பேராயர் தேவசகாயம் வெளியிட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த புதிய நிர்வாகிகள் மீண்டும்  பிரதம பேராயர், பொதுச்செயலர் என சினாட் நிர்வாகிகளிடம் முறையிட்டனர். இதனைத்தொடர்ந்து, தென்னிந்திய திருச்சபையின் பிரதம பேராயர்  தர்மராஜ் ரசலம்,  தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்துக்கு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுடன் பேராயர் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். இருப்பினும், பேராயர் தேவசகாயம், புதிய நிர்வாகிகள் செயல்பாட்டுக்கு ஒத்துழைக்காமல் எதிரணியினருக்கு ஆதரவாக தனி நிர்வாகத்தை நடத்தினார். இதனால் இரட்டை நிர்வாகமாக செயல்படும் நிலை ஏற்பட்டது. திருமண்டலத்தில் சுமூகமான நிர்வாகம் இல்லாததால் நிர்வாகத்தில் குழப்பம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக, தென்னிந்திய திருச்சபையின் சினாட் கோர்ட்டில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பேராயர் தேவசகாயம் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், புதிய நிர்வாகிகள் சுமூகமாக நிர்வாகம் செய்யவிடாமல் இடையூறு செய்ததாகவும் கூறி அவரை சஸ்பெண்ட் செய்வதாக சினாட் கோர்ட்டில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின்பு பிரதம பேராயரின் ஆணையர் நியமிக்கப்பட்டு திருமண்டல நிர்வாகம் தேர்தலில் வெற்றி பெற்ற டிஎஸ்எப் அணியினர் மூலமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் சுபாஷ் என்பவர் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் திருமண்டல தேர்தலை எதிர்த்து  வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த தனி நீதிபதி கடந்த 25.4.2022ல் புதிய நிர்வாகம் செயல்பட தடை உத்தரவு பிறப்பித்ததோடு, ஏற்கனவே இருந்த இடைக்கால கமிட்டி நிர்வாகம் செய்யவும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து கடந்த 29.4.2022 அன்று டிஎஸ்எப் அணியினர்  உயர்நீதி மன்ற பெஞ்சில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் தலைமையிலான அமர்வு  அளித்த தீர்ப்பில், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து, தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தலில் வெற்றி பெற்ற  நிர்வாகிகள் திருமண்டலத்தில் முறைப்படி செயல்படலாம் என்று  உத்தரவிட்டுள்ளனர். நீதிமன்றத்தின் உத்தரவினைத்தொடர்ந்து, டிஎஸ்எப் அணி சார்பிலான புதிய நிர்வாகிகள் லே செயலாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் தலைமையில் தங்களது திருமண்டல பணிகளை உடனடியாக மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து, திருமண்டல லே செயலாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் நிருபர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல் முறைப்படி நடைபெற்று புதிய நிர்வாகிகளாக நாங்கள் அனைவரும் தேர்வு செய்யப்பட்டோம். இருந்தபோதும் எங்கள் அணியின் வெற்றிக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் அனைத்தும் நீதிமன்ற உத்தரவின் மூலமாக தற்போது முடிவுக்கு வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. திருமண்டல பணிகளை நாங்கள் சிறப்பாக மேற்கொள்வோம். என்றார். பேட்டியின்போது, திருமண்டல உப தலைவர் தமிழ்ச்செல்வன், குருத்துவ செயலர் இம்மானுவேல் வான்ஸ்றக், பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம், தொடக்க நடுநிலைப்பள்ளிகளின் மேலாளர் ஜேஸ்பர் அற்புதராஜ், உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். நீதிமன்றத்தின் இந்த  தீர்ப்பால்  திருமண்டலத்தில் கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

Related Stories: