×

நிலத்தடி நீர் குறைந்துள்ளதால் சீரான குடிநீர் வழங்க வேண்டும் திருப்புத்தூர் நகர் மக்கள் வலியுறுத்தல்

திருப்புத்தூர், ஆக.10:  திருப்புத்தூர் நகர் பகுதியில் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகள் பழுதாகி இருப்பதால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவிக்கின்றனர். திருப்புத்தூர் பேரூராட்சிகுட்பட்ட 18 வார்டுகளில் பல தெருக்களில் முன் அடிகுழாய்கள் இருந்த இடத்தில் எல்லாம் புதிய தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டன. இதிலிருந்து அப்பகுதியினர் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். இதனால் நகரில் முழுவதும் தண்ணீர் தேவை பெருமளவு பூர்த்தி செய்யப்பட்டது. அடிகுழய்களில் அடித்ததற்கு சற்று ஓய்வும் கிடைத்தது. ஆனால் நாளடைவில் முறையான பராமரிப்பு இல்லாமல் பெரும்பாலான தண்ணீர் தொட்டிகள் பழுதடைந்து விட்டன. மேலும் பல இடங்களில் நிலத்தடி நீர் பற்றாக்குறையாகவும் இருந்துள்ளது.

இதனால் சில இடங்களில் மோட்டார் மூலம் தொட்டியில் தண்ணீர் பிடிக்க முடியாமல் மீண்டும் அடிகுழாய்களுக்கே திரும்ப வரும் சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது பல இடங்களில் அடிகுழாய்களும் பழுதடைந்து விட்டது. இந்நிலையில் தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் தற்போது தண்ணீர் தொட்டிகளையும் காணவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு வருடத்திற்கு முன் பேரூராட்சிக பகுதிகளில் ஆழ்குழாய்கள் பழுதான சில இடங்களில் வறட்சி நிவாரண திட்டம் 2016-2017ல் ரூ.3லட்சம் மதிப்பில் ஆழ்குழாய் மற்றும் குடிநீர் தொட்டி அமைந்தனர். ஆனால் குடியிருப்பு அதிகம் உள்ள பகுதிகளில் தண்ணீர் தேவை மிகுதியாக தேவைப்படும் இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட வில்லை.  இதனால் பிராபாகர் காலனி, காந்திநகர், தென்மாபட்டி, சின்னத்தோப்புத்தெரு, செட்டியதெரு, முஸ்லீம் நடுத்தெரு, காளியம்மன் கோயிவில் தெரு, கருணாநிதி நகர், சிவகங்கைச் சாலை உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் காளியம்மன் கோயில் அருகே இத்திட்டத்தில் ஆழ்குழாய் அமைத்து ஒரு தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது.

இதை யாரும் பயன்படுத்தாதால் தற்பொழுது அந்த பைப் துருப்பிடித்து வீணாகி கிடக்கிறது. இதேபோன்று சின்னத்தோப்பு தெருவிலும் ரூ.3லட்சம் மதிப்பில் ஆழ்குழாய் மற்றும் குடிநீர் தொட்டி பயன் இல்லாமல் வீணாக உள்ளது.
தேவையான இடங்களுக்கு வறட்சி நிவாரண திட்டத்தில் செய்து கொடுக்காமல், தேவையில்லாத இடங்களில் தண்ணீர் தொட்டி வைத்திருப்பதால் மக்களின் தேவையையும் பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே தற்போது பழுதாகியுள்ள தண்ணீர் தொட்டி இருந்த இடங்கள் அல்லது அதன் அருகே மீண்டும் போர் போட்டு தண்ணீர் கிடைக்க பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரியுள்ளனர்.

Tags : Tiruputhur ,
× RELATED சிவன் கோயிலில் பிரதோஷ விழா சிறப்பு வழிபாடு