சாயல்குடி, ஆக.10: கடலாடியில் இந்து,முஸ்லீம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக மதநல்லிணக்க திருவிழாவாக மொஹரம் பண்டிகையன்று பூக்குழி இறங்கும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடலாடி பகுதியில் ரணசிங்க பட்டாணி சாயூபு என்ற குறுநில மன்னர் வாழ்ந்து வந்துள்ளார். இவர் மறைவிற்கு பிறகு அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நாட்டு அத்தி மரம் ஒன்று வளர்க்கப்பட்டுள்ளது. அவர் மறைந்து சுமார் 500 ஆண்டுகளாக சேதமின்றி தற்போது வரை பசுமையாக காட்சியளிக்கிறது. இந்த மரம் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும் பல ஆண்டுகளாக விளங்கி வருகிறது. அவர் நினைவாக ஆண்டு தோறும் மொஹரம் பண்டிகை நாளில் பூக்குழி திருவிழா 11 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
இதுகுறித்து மேலக்கடலாடி முதியவர்கள் சிலர் கூறும்போது, கடலாடி சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள் அதிகமாக வாழ்ந்து வருகிறோம். விவசாயம் மட்டுமே பிரதான தொழில், இப்பகுதியினருக்கு முஸ்லீம் இனத்தை சேர்ந்த குறுநில மன்னரான ரணசிங்க பட்டாணி சாயூபு தலைவர் என்பவர் விவசாய நிலங்கள் வழங்கி கண்மாய், வரத்து கால்வாய், குளங்களை அமைத்து தானமாக வழங்கியதாக முன்னோர்கள் கூறியுள்ளனர். அவர் மறைவிற்கு பிறகு அவர் நினைவாக இப்பகுதி இந்து,முஸ்லீம் மக்கள் சேர்ந்து மொஹரம் பண்டிகையின் போது பூக்குழி எனப்படும் தீமிதி திருவிழா கொண்டாடப்படுகிறது. இதற்காக மொஹரம் பிறை தெரிந்த 11 நாட்கள் விரதம் இருந்து வருகிறோம். கடலாடி மங்களவிநாயகர் கோயில் அருகே உள்ள இடத்தில் உலோகத்தாலான பிறை, கை உருவம் ஒன்றை வைத்து வழிபாடு செய்து வருகிறோம்.
விழா துவங்கி 7ம் நாள் மற்றும் 11ம் நாள் அத்தி மரத்திலிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தை ஊர் முழுவதும் ஊர்வலமாக எடுத்து வருவோம். அப்போது இந்து கோயில்களில் வரவேற்பு செய்யப்படும், அவர்களுக்கு சர்க்கரை பிரசாதமாக கொடுக்கப்படும். பூக்குழி திடலில் வழிபாடு செய்து தொழுகை செய்யப்பட்ட பிறகு பூக்குழி இறங்குவோம். பெண்கள் தலையில் தீக்கங்குகளை கொட்டி வழிபாடு செய்வர். இதனால் விவசாயம் செழித்து, பொதுமக்கள் நோய்களின்றி ஆரோக்கியமாக வாழ்வார்கள் என நம்பப்படுகிறது என்றனர்.