×

தேசிய கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் கண்வலி கிழங்கு விதைகளை கொள்முதல் செய்திட வேண்டும் பிரதமர் அலுவலகத்தில் தமிழக எம்பிக்கள் கடிதம்

ஒட்டன்சத்திரம், ஆக. 10:  தமிழகத்தில் செங்காந்தள் மலர் பயிரிடும் விவசாயிகளின் நலனுக்காக திமுக பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் திமுக மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த 28 எம்பிக்கள் கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிரதம மந்திரி அலுவலகத்தின் பிரதம மந்திரியின் முதன்மை உதவியாளரிடம் கொடுத்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கண்வலி கிழங்கு விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகளை தங்களின் கனிவான பரிசீலனைக்கு கொண்டு வருகிறோம். செங்காந்தள் மலர் என்று அழைக்கப்படும் கண்வலி கிழங்கு தமிழ்நாட்டின் மாநில மலர் ஆகும். தமிழக விவசாயிகள் பராம்பரியமாக பல மருத்துவ மூலிகைகளை பயிரிட்டு, அவற்றை ஏற்றுமதி செய்தும் வருகின்றனர். உயிர் காக்கும் மதிப்புமிக்க மருத்துவ மூலிகைகளை விவசாயிகள் உற்பத்தி செய்தாலும் வணிக பரிவர்த்தனைகள் வியாபாரிகளுக்கும், இடைத்தரர்களுக்கும்தான் சாதகமாக உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறு, நடுத்தர புஞ்சை விவசாயிகள் இதை பயிரிட்டு வருகிறார்கள். ஆரம்பத்தில் முதலீட்டுக்கு தக்க பலன்கள் கிடைத்தாலும் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் குறைந்த விலையே கிடைத்து வருகிறது. இந்த பயிரை விளைவிக்க அதிக முதலீடும், தொடர்ந்து தீவிர கண்காணிப்பும் தேவைப்படுகிறது. அதிகமான வேலையாட்களும் இதற்கு தேவைப்படுகிறார்கள். இதனால் லட்சக்கணக்கான விவசாய தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. சமீபகாலமாக இந்த விவசாயிகள் குறைந்த விளைச்சல், குறைந்த விலை (ஏற்கனவே கிடைத்த விலையில் பாதி) போன்றவற்றால் மிகவும் பாதிக்கப்பட்டு, முன்னர் சம்பாதித்த பணத்தை இழந்ததோடு, கடனிலும் மூழ்கியுள்ளனர். ஏற்கனவே சில முறைகள் ஒன்றிய வேளாண்மை அமைச்சகத்திடம் இந்த பிரச்னையை எடுத்து சென்றும் பயன் ஏதும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக சமீபத்தில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை- உழவர்நலத்துறை செயலாளர் ஒன்றிய வேளாண்மைத்துறை செயலாளருக்கு எழுதிய கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கண்வலி கிழங்கு தமிழ்நாட்டில் 5 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் வறண்ட பகுதிகளான திண்டுக்கல், கரூர், திருப்பூர், தர்மபுரி மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது. இதன் விதைகள் முடக்குவாதம், புற்றுநோய், அலர்ஜி போன்ற நோய்களுக்கு மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

ஐரோப்பியா மற்றும் இதர நாடுகளின் மருந்து கம்பெனிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இத்தகைய நிலையில் இந்திய ஒன்றிய அரசு இதில் அவசரமாக தலையிட்டு, இந்த மூலிகை பயிரை, பயிர் செய்யும் விவசாயிகளை பொருளாதார சீரழிவிலிருந்து காப்பாற்றிட வேண்டுகோள் வைக்கிறோம். தேசிய ஆயுஸ் மிசன், தேசிய காய்கறி மிசன் போன்ற திட்டங்கள் மருத்துவ மூலிகைகளுக்காக இந்திய அரசிடமிருந்தாலும் தேசிய கூட்டுறவு விற்பனை இணையம் வழியாக கண்வலி விதைகளை கொள்முதல் செய்து, விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தால் தனியாரின் ஏகபோக கொள்முதலை நிறுத்தி, விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலையை பெற்று தர முடியும். மேலும் இதன் ஏற்றுமதி சீராக்கப்படுவதோடு, தற்சார்பு இந்தியா திட்டத்தின் மூலம் இதற்கு மதிப்பு கூட்டி விற்பனை செய்து, தங்களின் இலக்கான விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்கும் முயற்சியும் வலுப்பெறும். ஆதலால் உடனடியாக தேசிய கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் கண்வலி விதைகளை கொள்முதல் செய்திட ஆவண செய்திடவும், மருத்துவ மூலிகைகளை கொள்முதல் செய்திட தனியாக நடவடிக்கை எடுத்திடவும் தங்களை கேட்டு கொள்கிறோம் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

Tags : Tamil Nadu ,MPs ,National Cooperative ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...