×

வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜ தோற்கடிக்கப்பட வேண்டும்

திருப்பூர், ஆக. 10:  வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜ தோற்கடிக்கப்பட வேண்டும் என திருப்பூரில் நடந்த இந்திய கம்யூனிஸ்டு மாநில மாநாட்டில் தேசிய பொதுச்செயலாளர் ராஜா பேசினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில 25-வது மாநாடு, திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள  வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில்  கடந்த 6ம் தேதி காலை தொடங்கியது.   கட்சி கொடியை ஏற்றி வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநில செயலாளர் முத்தரசன், தேசிய கவுன்சிலர் உறுப்பினர் ஆனி ராஜா ஆகியோர் மாநாட்டை தொடங்கி வைத்தனர்.  

மாநாடு தொடங்கியதும் கட்சியின் அரசியல் அறிக்கை, கட்சியின் அமைப்பு நிலை அறிக்கை, கடந்த  4 ஆண்டுகளாக கட்சி ஆற்றிய பணிகள் ஆகியவை குறித்த அறிக்கைகள் முன் வைக்கப்பட்டு, அதன் மீது விவாதங்கள் நடந்தது.  இதன் பின்னர் நடந்த மாநாட்டில் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பலர் பேசினர். இந்நிலையில் மாநாடு தொடர்ந்து நடந்து வந்த நிலையில் இறுதி நாளான நேற்று மாலை திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் இருந்து செம்படை பேரணி நடந்தது. பேரணி வளர்மதி, பழைய பஸ் நிலையம், சி.டி.சி. கார்னர் வழியாக வந்து காங்கேயம் ரோட்டில் உள்ள பத்மினி கார்டனில் வந்து முடிவடைந்தது.

இதில் ஏராளமானவர்கள் மேள, தாளம் முழங்க பறை இசையுடன் பேரணியாக வந்தனர். இதன் பின்னர் அங்கு ‘மக்கள் விரோத மோடி அரசே வெளியேறு’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சுப்பராயன் எம்.பி. தலைமை தாங்கி பேசினார். தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, மூத்த தலைவர் நல்லகண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி. அகில இந்திய பொதுச்செயலாளர் அமர்ஜீத் கவுர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் நாரயணா, தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ஆனி ராஜா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மாநகராட்சி துணை மேயர் சுப்பிரமணியம், மாநில குழு உறுப்பினர் ரவி ஆகியோர் பேசினர்.

மாநாட்டில் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா பேசியதாவது: ஒரே நாடு, ஒரே கலாசாரம், ஒரே மொழி, ஒரே வரி என ஒற்றை பரிமான நாடாக மாற்ற பாஜ முயற்சி செய்து வருகிறது. பாஜ ஆளுநர்களை வைத்து ஆட்சி நடத்துகிறது. நாடு ஒன்றுபட வேண்டுமானால் பாஜவின் கருத்து எதிர்க்கப்பட வேண்டும். மாநில அரசின் உரிமைகளை பாஜ பறிக்கிறது. 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜ தோற்கடிக்கப்பட வேண்டும். இது வரலாற்று தேவை. பாஜ ஆட்சியில் நாடு அழிகிறது. பாஜவை முறியடிக்க அனைத்து இடதுசாரிகள், ஜனநாயக சக்திகள் ஒன்றுபட வேண்டும். பீகார் அரசியலில் பாஜ கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் வெளியேறியுள்ளது. அதிகார பலம், பண பலத்தை வைத்து பாஜ தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது. வருகிற 30ம் தேதி மாநிலம் முழுவதும் விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளோம். பாஜவிற்கும் சுதந்திரத்திற்கும் சம்பந்தம் இல்லை. நாட்டுக்காக உயிரை தியாகம் செய்தவர்கள் கம்யூனிஸ்டு காரர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டின் முடிவில் தமிழ்நாட்டில் இடதுசாரிகளின் முகமாக திகழும் மூத்த அரசியல் தலைவர், விடுதலை போராட்ட வீரர் மற்றும் பல்வேறு பொறுப்புகள் வகித்து வருகிற நல்லகண்ணுவிற்கு தமிழக அரசு தகை சால் தமிழர் என்ற விருது வழங்கியுள்ளது. இந்த விருதை வழங்கிய தமிழக அரசுக்கும், தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது. காந்தியடிகள், வர்ணாசிரமத்தை உடைத்தெறிந்து ஆசிரமம் நடத்தி வந்த ஜீவாவை நேரில் சென்று சந்தித்து உரையாடிய சிவகங்கை மாவட்டம் சிராவயல் கிராமத்தில், அந்த சந்திப்பின் நினைவாக மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கோரிக்கையை ஏற்று, கட்சி மாநாட்டு கருத்தரங்கிலேயே தமிழக அரசின் சார்பாக மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி தனது பெருமிதமிக்க பாரம்பரியத்தோடு, வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கிய ஆகஸ்டு 9ம் தேதி முதல் வருகிற 15ம் தேதி வரை நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள், அலுவலகங்கள் அனைத்திலும் தேசிய கொடியேற்றுவது என்பது உள்பட 92 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக 3-வது முறையாக முத்தரசன் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கட்டுப்பாட்டுக்குழு தலைவராக சுப்பராயன் எம்.பி. ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் நிர்வாகிகள் மகேந்திரன், வீரபாண்டியன், ஆறுமுகம், ரவிச்சந்திரன், இசாக் மற்றும் ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச்செயலாளர் மூர்த்தி, மாவட்ட பொதுச்செயலாளர் சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : BJP ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...