திருவாரூர் நகர பகுதிகளில் 15,971 தேசியக்கொடி வீடுவீடாக சென்று வழங்கும் பணி

திருவாரூர்,ஆக.10: திருவாரூர் நகர பகுதிகளில் இருந்து வரும் 15 ஆயிரத்து 971 குடியிருப்புகளுக்கு வீடு வீடாக சென்று தேசியக்கொடி வழங்கும் பணியினை நகர்மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் துவக்கி வைத்தார். நாட்டின் 75வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவினையொட்டி கடந்த ஓராண்டு காலமாக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வரும் 15ம் தேதி நடைபெற உள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் விழாக்கள் மட்டுமின்றி பொதுமக்கள் தங்களது வீடுகளில் முன்கூட்டியே அதாவது வரும் 13,14 மற்றும் 15ம் தேதிகள் என தொடர்ந்து 3 நாட்கள் தேசிய கொடியினை தங்களது வீடுகளில் பறக்க விட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தமிழகத்தில் இந்த தேசிய கொடியினை தைக்கும் பணியில் மாநிலம் முழுவதும் மகளிர் சுய உதவி குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி திருவாரூர் மாவட்டத்திலும் 50 ஆயிரத்து 633 தேசியக்கொடியை மகளிர் சுய உதவி குழு மூலம் தைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவாரூர் நகராட்சி பகுதிக்கு தேவையான 15 ஆயிரத்து 971 தேசிய கொடியினை நேற்று முன்தினம் கமிஷனர் பிரபாகரனிடம் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார். இதனையடுத்து நேற்று இந்த கொடியினை நகரில் வீடு வீடாக சென்று வழங்கும் பணியினை தலைவர் புவனப்பிரியா செந்தில் துவக்கி வைத்ததுடன் வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரையில் தேசிய கொடியினை தங்களது வீடுகளில் ஏற்றுமாறும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் பிரபாகரன், மேலாளர் முத்துக்குமார், அலுவலர்கள் மூர்த்தி, செந்தில்குமார் மற்றும் நகராட்சி ஓப்பந்த குழு உறுப்பினர் அசோகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: