திருவாரூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் பெறலாம்

திருவாரூர், ஆக.10: திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் விவசாய கடன்கள் மற்றும் உரங்கள் வழங்கப்பட்டு வருவதாக கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் சித்ரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன், கால்நடை பராமரிப்புக்கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன், குறைந்த வட்டியில் மகளிர் சுய உதவிக்குழுக்கடன் மற்றும் நகைக்கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன் போன்ற அனைத்து விதமான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி, தங்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ சமர்ப்பித்து, பங்குத்தொகை மற்றும் நுழைவு கட்டணம் செலுத்தி உடன் உறுப்பினராகலாம்.

மேலும் நகர கூட்டுறவு வங்கிகளில் குறைந்தவட்டியில் நகைக்கடன், மத்திய காலக்கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன், மகளிர் சுயஉதவிக்குழுக் கடன், விதவைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கான கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன் போன்ற கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கும் உறுப்பினர்கள் தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், கணினி சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் சான்றுடன் கடன் மனு சமர்ப்பித்து பயிர் கடன் மற்றும் இதர கடன்களை பெற்று பயனடையலாம். உறுப்பினர் மற்றும் உறுப்பினரல்லாத விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை சில்லரை விற்பனை மூலம் பெற்றுகொள்ளலாம். மேலும், இதில் ஏதேனும் சேவை குறைபாடுகள் இருந்தால் திருவாரூர் மண்டல இணைப்பதிவாளரை 7338749200, திருவாரூர் சரக துணைப்பதிவாளரை 9488489712, மன்னார்குடி சரக துணைப்பதிவாளரை 7338749203 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: