×

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேருக்கு மீண்டும் கண்ணாடி கூண்டு

திருவாரூர், ஆக. 10: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் ஆழித்தேர் தினகரன் செய்தி எதிரொலியாக மீண்டும் கண்ணாடி கூண்டு கொண்டு மூடுவதற்கான பணிகள் துவங்கியது. திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜ சுவாமி கோயில் சைவசமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும், சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் கோயில் 5 வேலி, குளம் 5 வேலி, ஓடை 5 வேலி என நிலப்பரப்பினை கொண்ட இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் இருந்து வரும் நிலையில் இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. தேரோட்டத்தின் போது தியாகரஜ சுவாமி அமர்ந்து வலம் வருவது வழக்கம். மேலும் சாதாரணமாக 30 அடி உயரமும், 30 அடி அகலமும் கொண்ட இந்த தேர் 4 ராட்சத இரும்பு சக்கரங்கள் உட்பட மொத்தம் 220 டன் எடை கொண்டதாகும்.

இந்த ஆழித்தேர் கடந்த காலங்களில் தகர கொட்டகை கொண்டு மூடப்பட்டு வந்த நிலையில் இந்த ஆழிதேரோட்டத்திற்காக 2 மாதத்திற்கு முன்பு இந்த தகர கொட்டைகை பிரிக்கப்படுவதும், அதன் பின்னர் விழா முடிந்து மீண்டும் தகரம் கொண்டு மூடப்படுவதும் வழக்கமாக இருந்து வந்த நிலையில் தகரம் சேதம் காரணமாக மழை மற்றும் வெயில் காலங்களில் இந்த ஆழித்தேர் சேதமடையும் நிலை ஏற்பட்டதை கருதியும், இந்த தேரில் இருந்து வரும் பாரம்பரிய வேலைபாடுகள் கொண்ட மர சிற்பங்களை பாதுகாக்கவும், தேரோட்டம் இல்லாமல் பிற நாட்களில் வெளியூர் பக்தர்கள் இந்த தேரின் அழகை கண்டு களிக்கும் வகையிலும் அரசு சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பில் இந்த ஆழித்தேருக்கு என கண்ணாடி கூண்டுகள் அமைக்கப்பட்டன.

இதனையொட்டி கண்ணாடி கூண்டு என்பது கடந்த 3 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் பிரிக்கப்பட்டு விழாவிற்கு பின்னர் மீண்டும் அமைக்கப்படுவது வழக்கமாக இருந்து வந்த நிலையில் தற்போது நடப்பாண்டில் இந்த விழா முடிந்து 4 மாதங்களுக்கும் மேல் கடந்த பின்னரும் இந்த கண்ணாடி கூண்டு அமைக்கும் பணியானது நடைபெறாமல் ஏதோ பெயரளவில் தகரக் கொட்டகை கொண்டு அமைக்கப்பட்டுள்ளதால் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்படும் இந்த தேர் சேதம் அடையாமல் இருக்கும் வகையில் மீண்டும் உடனடியாக கண்ணாடி கொண்டு அமைக்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும் என கோயில் நிர்வாகத்திற்கு பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தது குறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து இந்த கண்ணாடி கூண்டு அமைப்பதற்கான இரும்பு தூண்கள் உட்பட தளவாட பொருட்கள் அனைத்தும் கோயிலின் அருகே திருமணமண்டபம் முன்பாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த பொருட்களை கிரேன் மூலம் ஆழித்தேர் அருகே கொண்டு வந்து சேர்க்கும் பணி நடைபெற்றுள்ள நிலையில் விரைவில் கண்ணாடி கூண்டு அமைக்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Thyagaraja ,Swamy ,
× RELATED தியாகராஜர் கண்ட தெய்வீக தரிசனம்!