பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோயில் ஆடி தேரோட்டம்

பொன்னமராவதி,ஆக.10: பொன்னமராவதியில் உள்ள அழகிய நாச்சியம்மன் கோயில் ஆடி தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கோயில்களில் ஒன்றாக பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் வருடம் தோறும் ஆடித்திருவிழா நடப்பது வழக்கம். இதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 31ம்தேதி சுவாமிக்கு காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தினசரி மண்டகப்படி நடந்து வந்தது. அப்போது தினசரி சுவாமி வீதிவுலா நடந்தது. இந்த கோயில் முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று 9ம் தேதி மாலை நடந்தது. முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜாஅம்பலகாரர் தலைமையில் தேரை பொதுமக்கள் வடம்பிடித்து கோயிலை சுற்றி இழுத்து சென்று வழிபாடு செய்தனர்.

இதில் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை பல இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு நீர், மோர் வழங்கப்பட்டது. பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் தனபாலன் மற்றும் போலீசார், தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக சமீபத்தில் புதுக்கோட்டை திருவப்பூர் தேர் சாய்ந்து விபத்து ஏற்பட்டதையடுத்து இந்து அறநிலையத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகள் முன்னதாக தேரின் தரம், நல்லநிலையில் உள்ளதா, தேர் செல்லும் பாதைகள் குறித்து ஆய்வு செய்தனர். இன்று (10ம் தேதி) அம்மன்குறிச்சி தேர்திருவிழா நடக்கின்றது.

Related Stories: