×

குலாப் புயல் காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளில் 2வது நாளாக மழை பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரேநாளில் 4 அடி உயர்வு

நெல்லை: குலாப்   புயல் கரை கடந்த நிலையில் நெல்லை, தென்காசி மாவட்ட நீர்பிடிப்பு   பகுதி களில் 2வது நாளாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்துள்ளது.நெல்லை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் மூலம் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் விவசாய தேவையும், விருதுநகர் சேர்த்து நான்கு மாவட்டங்களில் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் தென் மேற்கு பருவமழை காலமாகும். அக்டோபர் மாதம் தொடங்கும் வடகிழக்கு பருவமழை டிசம்பர்  வரை நீடிக்கும்.அடுத்த மாதம் வடகிழக்கு பருவ மழையை விவசாயிகள் எதிர்பார்த்துள்ள நிலையில் குலாப் புயல் கரை கடந்ததன் காரணமாக நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு  நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி பாபநாசம்   அணையில் 79.75 அடியாக   இருந்த நீர்மட்டம் மேலும் 4 அடி உயர்ந்து நேற்று காலை 83.15 அடியானது.  அணைக்கு வினாடிக்கு 2791 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 510 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதேபோல்  சேர்வலாறு அணையில் 95.80 அடியாக இருந்த நீர்மட்டம் மேலும் 5 அடி உயர்ந்து 100.20 அடியானது. மணிமுத்தாறு அணையின் நீர்இருப்பு 63 அடியாக உள்ளது.   அணைக்கு விநாடிக்கு 74 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை மூடப்பட்டுள்ளது. குண்டாறு அணையில் நீர்இருப்பு முழு கொள்ளளவான 36.10 அடியாக உள்ளது.   பாபநாசம் அணைப் பகுதியில் 2 மில்லி மீட்டர்   மழை பதிவாகி உள்ளது. சேர்வலாறு 1, தென்காசி மாவட்டம் அடவிநயினார் 15,   குண்டாறு 6, கடனாநதி 4 மிமீ மழை பதிவாகியுள்ளது.இது தவிர மாவட்டங்களில் தென்காசி மாவட்டத்தில் ஆய்க்குடி 3, செங்கோட்டையில் 2 மில்லி மீட்டர்   மழைபதிவாகி உள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை ஒருசில இடங்களில் சாரல் மழை   பெய்தது. தொடர்ந்து மேகமூட்டம் காணப்பட்டது….

The post குலாப் புயல் காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளில் 2வது நாளாக மழை பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரேநாளில் 4 அடி உயர்வு appeared first on Dinakaran.

Tags : Gulab ,Babanasam dam ,Nellai ,Tenkasi ,Papanasam ,Dinakaran ,
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...