அதிகம் முன்பதிவாகியுள்ளதால் வேதாரண்யம் பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

வேதாரண்யம், ஆக.10: சதூர்த்தியை முன்னிட்டு நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. மேலும் வெளிமாவட்டங்களில் இருந்தும் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சிலை தயாரிப்பு தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணத்தால் கோயில் விழாக்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டது. விநாயகர் சதூர்த்தி விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட முடியாமல் இருந்து வந்தது. தற்போது அரசு அனைத்து விழாக்களும் பொதுமக்கள் கொண்டாட அனுமதி அளித்ததன் பேரில் விநாயக சதூர்த்தி விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. விநாயகர் சதூர்த்தி அன்று நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் வைக்கப்பட்டு பின்பு பூஜைகள் நடைபெற்று கடல், ஆறு, ஏரிகளில் கரைப்பது வழக்கம். இதனால் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் விநாயகர் சிலை செய்யும் பணியில் சிலை வடிவமைப்பாளர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

கிராமங்கள் தோறும் விநாயகர் சிலைகளை தெருவில் முக்கிய வீதிகளில் வைத்து வழிபடுவது வழக்கம். அது மட்டும் இன்றி தெருகளிலும் ஆங்காங்கே விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபாடு செய்வர். இந்த வழிபாடு செய்த விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைத்து வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு தடைகள் இல்லாத காரணத்தால் விநாயகர் சதூர்த்தி விழா பெரிய அளவில் அனைத்து பகுதிகளிலும் நடைபெறும் என சிலை வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். வேதாரண்யம் அடுத்த குரவப்புலம், தேத்தாகுடி, செம்போடை, பிராந்தியங்கரை தலைஞாயிறு பகுதிகளில்5 அடியிலிருந்து 20 அடி வரை விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வேதாரண்யம் பகுதியில் தயாரிக்கபடும் விநாயகர் சிலைகள் சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் வாட்டர் கலர்கள் பயன்படுத்தி சிலைகளுக்கு வர்ணம் பூசப்பட்டு சிலைகள் அந்தந்த ஊர்களுக்கு அனுப்பப்பட உள்ளது. குறைந்தது இரண்டடி முதல் அதிகபட்சம் 15 அடி உயரம் வரையிலும் குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் அதிகபட்சம் 12 ஆயிரம் ரூபாய் வரையிலும் விநாயகர் சிலைகளை கண்கவர் வண்ணங்களில் கலைநயத்துடன் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதில் அலங்கார விநாயகர், விஜய கணபதி விநாயகர், சூரிய விநாயகர், செல்வ விநாயகர், பாலகணபதி, சித்திகணபதி, மகா கணபதி, யோக கணபதி, மூஸிக கணபதி, உள்ளிட்ட பல்வேறு கணபதி சிலைகள் மூஞ்சூர் வாகனம் மட்டுமின்றி மயில், மான், சிங்க வாகனங்களிலும் கண்ணை கவரும் பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக விநாயகர் சதூர்த்தி விழா நடைபெறாமல் இருந்த நிலையில், இந்தாண்டு விநாயகர் சதூர்த்தி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளதால் ஏராளமான இடங்களில் சிலைகள் வைப்பதற்கு முன்கூட்டியே முன்பதிவு செய்துள்ளனர். இதனால் உள்ளூரில் உடனடியாக தயாரித்து சிலைகள் கொடுக்கப்பட முடியாதால், வெளி மாவட்டங்களிலிருந்து சிலைகள் வரவழைக்கப்பட்டு இங்கு வைத்து வர்ணம் பூசி சிலைகள் முன்பதிவு செய்தவர்களுக்கு விநாயகர் சிலைகள் அளிக்கபட உள்ளது. இந்த ஆண்டு அதிகளவில் விநாயகர் சிலைகளுக்குமுன்பு பதிவு இருப்பதால் இத்தொழிலில் ஈடுபட்டுவரும் தொழிலாளருக்கு வேலை வாய்ப்பு கூடுதலான வருமானம் கிடைக்கும் என சிலை தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories: