மஞ்சூர் - கோவை சாலையில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது

மஞ்சூர்,ஆக.9:  ‘சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையில் வீடு இடிந்ததுடன் மஞ்சூர், சாம்ராஜ் தங்காடு, கோவை சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. சூறாவளி காற்றுடன் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் தினசரி மரங்கள் விழுவதும், மண் சரிவுகள் ஏற்பட்டும் ஆங்காங்கே வீடுகள் இடிவது வாடிக்கையாக உள்ளது. இதனால் வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்படுவதுடன் பொதுமக்கள் மத்தியில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினமும் இரவு விடிய, விடிய பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இதில் இத்தலார் எல்லக்கண்டி பகுதியில் ராட்சத மரம் வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதனால் மஞ்சூர்- இத்தலார்- ஊட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இதேபோல் எடக்காடு அருகே பிகுளிபாலம் பகுதியிலும் இரண்டு மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மஞ்சூர் ஊட்டி சாலையில் சாம்ராஜ் எஸ்டேட் அருகே பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது.

இதேபோல் மஞ்சூர் -கோவை சாலையில் 23வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோரம் இருந்த ராட்சத மரம் ஒன்று ரோட்டின் குறுக்கே விழுந்தது. தங்காடு உள்பட பல்வேறு இடங்களில் மண் சரிவுகளும் ஏற்பட்டதால் வாகனப்போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து நெடுஞ்சாலைதுறை கோட்டப்பொறியாளர் குழந்தைராஜ் அறிவுறுத்தல்படி உதவி கோட்டப்பொறியாளர் ஜெயபிரகாஷ் மேற்பார்வையில் குந்தா பிரிவு உதவி பொறியாளர் பெருமாள் மற்றும் சாலை ஆய்வாளர்கள் ரவிக்குமார், நஞ்சுண்டன், முருகன் மற்றும் சாலைப்பணியாளர்கள் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றினார்கள். ஜேசிபி இயந்திரங்களின் உதவியோடு மண் சரிவுகளும் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. இதேபோல் நேற்று காலை மஞ்சூர் அருகே முள்ளிகூர் கிராமம் குட்டிமணி நகரை சேர்ந்த விஜயலட்சுமி என்பவரின் வீடு பலத்த மழையில் இடிந்து விழுந்தது. இதை தொடர்ந்து குந்தா தாசில்தார் இந்திரா அறிவுறுத்தலின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் மற்றும் வருவாய்துறையினர் பாதிக்கப்பட்ட விஜயலட்சுமிக்கு நிவாரணதொகை வழங்கினர்.

மேலும் குந்தாபாலம் மாரியம்மன் கோயில் அருகே விழும்  நிலையில் காணப்பட்ட பெரிய மரம் குந்தா தாசில்தார் இந்திரா மற்றும் வருவாய்துறையினர் முன்னிலையில் நேற்று மதியம் ஜேசிபி உதவியுடன் வெட்டி அகற்றப்பட்டது.

அப்பகுதியில் உயர் மின் அழுத்த மின் கம்பம் இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குந்தா பகுதியில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு மரத்தை வெட்டி அகற்றிய பிறகே மின் விநியோகம் வழங்கப்பட்டது.  இதேபோல் சாலையோரங்களில் விழுந்த மரங்களை நெடுஞ்சாலைதுறையினருடன் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் வெட்டி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Related Stories: