குந்தா அணையில் இருந்து உபரி நீர் திறப்பு

மஞ்சூர், ஆக.9:  நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து குந்தா அணை திறந்து விடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் வளி மண்டல சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, போர்த்திமந்து உள்பட நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்கிறது. இதனால் ஆறுகள், சிற்றோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. இதன் காரணமாக குடிநீர் மற்றும் மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள அணைகளுக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மஞ்சூர் அருகே உள்ள குந்தா அணைக்கு நேற்று முன் தினம் காலை முதலே நீர்வரத்து பெருமளவு அதிகரித்தது. இந்நிலையில் நேற்று பகல் அணையின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவான 89 அடியை எட்டியது. இதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி மின்வாரிய உயர் அதிகாரிகள் முன்னிலையில் குந்தா அணையின் மதகுகள் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 500 கன அடி நீர் வரும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக அணை திறக்கப்படுவதை முன்னிட்டு ஆற்றின் பொதுமக்கள் மற்றும் கரையோரத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்கவும் மின்வாரிய தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டது. குந்தாஅணை திறந்து உபரிநீர் வெளியேற்றப் பட்டதால் கெத்தை அணையின் நீர் மட்டம் மள,மளவென உயர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது குறிப்படத்தக்கது.

Related Stories: