பணியாளர் டிஸ்மிஸ் கண்டித்து பெடரல் வங்கி ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டம்

தஞ்சாவூர், ஆக.9: பெடரல் வங்கி பணியாளர் டிஸ்மிஸ் செய்யப்பட்டதை கண்டித்தும், அவருக்கு மீண்டும் பணி வழங்ககோரியும் தஞ்சையில் ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு செய்து வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியா முழுவதும் பெடரல் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் புனே கிளையில் பணிபுரிந்த மும்பையை சேர்ந்த சுமித் நம்பியார் என்ற ஊழியர் பதவி உயர்வுக்கான தேர்வு எழுதியபோது ஒழுங்கீனமாக செயல்பட்டதாக கூறி வங்கி நிர்வாகம் டிஸ்மிஸ் செய்தது. இதனை கண்டித்தும், மீண்டும் சுமித் நம்பியாருக்கு வேலை வழங்க கோரியும் இந்தியா முழுவதும் பெடரல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தஞ்சை சீனிவாசம்பிள்ளை சாலையில் உள்ள பெடரல் வங்கி ஊழியர்கள் நேற்று (திங்கள்) பணியை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கோவிந்தன் தலைமை வகித்தார். மத்திய கூட்டுறவு வங்கி ஓய்வுபெற்ற ஊழியர் சங்க தலைவர் சிவமணி, சங்க நிர்வாகிகள் கருணாமூர்த்தி, கணபதி, சாமிராஜ், ராமலிங்கம், தர்மலிங்கம், சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், அருந்தவபுரம், திருப்பெரம்பூர் ஆகிய பகுதிகளில் இருக்கும் பெடரல் வங்கி ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது பணி நீக்கம் செய்யப்பட்ட சுமித் நம்பியாருக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருவதால் அந்த வங்கியின் பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

Related Stories: