×

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் 8வது தேசிய கைத்தறி கண்காட்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்

தஞ்சாவூர், ஆக.9: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று 8வது தேசிய கைத்தறி கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:
கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கைத்தறித் தொழிலை மேம்படுத்தி கைத்தறி நெசவாளர்களின் வருவாயை உயர்த்தவும், அவர்களின் பெருமையை அதிகரிக்கவும் தேசிய கைத்தறி தினம் 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 2022ஆம் ஆண்டுக்கான 8-வது தேசிய கைத்தறி நாள் விழாவானது ஆகஸ்ட் 7ம் தேதி தேசிய அளவில் கொண்டாடப்பட்டது.

இதில் கும்பகோணம் சரக கைத்தறி துறை சார்பில் திருபுவனம் பகுதியில் உள்ள நெசவாளர் பொது வசதி மைய வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சியும், நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கொரோனா சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாம் மற்றும் நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, நேற்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 8வது தேசிய கைத்தறி நாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற சிறப்பு கைத்தறி கண்காட்சி தொடங்கப்பட்டு இக்கண்காட்சியில் திருபுவனம் அசல் வெள்ளி ஜரிகை சேலைகள், ஆப்பைன் பட்டு சேலைகள், வேங்கடகிரி பருத்தி சேலைகள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் சார்பாக பல்வேறு கைத்தறி ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். கும்பகோணம் சரக கைத்தறி உதவி இயக்குநர் கிரிஜாராஜ், கைத்தறி துறை அலுவலர்கள், சங்க நிர்வாகிகள்  பங்கேற்றனர்.

Tags : 8th National Handloom Exhibition ,Thanjavur Collector Office ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு