புதுக்கோட்டையில் 10 நாட்கள் நடந்த புத்தக திருவிழாவில் ஒரு லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்

புதுக்கோட்டை, ஜூலை.9: புத்தக திருவிழா எழுத்தாளர்கள், கலைஞர்கள், வாசகர்கள், மாணவர்கள், பொதுமக்களின் பேராதரவுடன் ரூ.2.5 கோடி அளவுக்கு விற்பனை இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது. இதில் ஒரு லட்சம் மாணவர்கள், ஒரு லட்சம் வாசகர்கள் பங்கேற்றனர். புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 5வது புதுக்கோட்டை புத்தக திருவிழாவை ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7ம் தேதிவரை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடத்தியது. மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தங்கம்மூர்த்தி, நா.முத்துநிலவன், ராஜ்குமார், பாலகிருஷ்ணன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எழுத்தாளர்கள், கலைஞர்கள், வாசகர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பத்து நாட்களும் புத்தக திருவிழாவை நோக்கி படையெடுத்து வந்தனர்.

காலையில் மாணவர்களுக்கான அறிவியல் நிகழ்ச்சிகள், விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், கோளரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. புத்தகத் திருவிழாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் நாள் மாலையில் நடைபெற்ற இலக்கியச் சொற்பொழிவில் ஒடிசா மாநில முதல்வரின் சிறப்பு ஆலோசகர் பாலகிருஷ்ணன் பேசினார். தொடர்ந்து தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சினிமா நடிகை ரோகிணி, ஊடகவியலாளர் கார்த்திக்கேயன், முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, விஞ்ஞானி வெங்கடேஸ்வரன், பேராசிரியர் நல்லசிவன், பேராசிரியர் அப்துல்காதர், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, மேனாள் துணைவேந்தர் சுப்பையா, திட்டக்குழுத் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், நாட்டியக்கலைஞர் நர்த்தகி நடராஜ், ஊடகவியலாளர் கோபிநாத் என இறுதியாக நீதியரசர் சந்துருவின் சிறப்புரையோடு புத்தகத் திருவிழா நிறைவு பெற்றது.

சிறந்த நூல்களுக்கான விருதுகள் வழங்கல், பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கல், புத்தகங்கள் வெளியீடு, சாதனையாளர்கள் கவுரவிப்பு, பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் என தொடர்ந்து புத்தக திருவிழாவை நோக்கி வாசர்களை அழைத்து வருவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்து புத்தகத் திருவிழாக்குழுவின் தலைவரும், மாவட்ட கலெக்டருமான கவிதா ராமு பேசியது: புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு உண்மையிலேயே ஒரு முக்கியமான திருவிழா. 10 நாட்கள் நடைபெற்ற புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் ரூ.2.5 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. ஒரு லட்சம் பொதுமக்களும், ஒரு லட்சம் மாணவ, மாணவிகளும் புத்தகத் திருவிழாவுக்கு வந்து சென்றுள்ளனர். கோளரங்கத்தை 25 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர் என்றார்.

Related Stories: