×

சீரமைத்து நினைவு மண்டபம் அமைக்க கோரிக்கை செத்தும் கொடுத்த சீதக்காதி வாழ்ந்த மாளிகை சேதம்

கீழக்கரை, ஆக.8: செத்தும் கொடை கொடுத்தான் சீதக்காதி என்ற வாக்கியத்தை அறியாதவர்கள் தமிழகத்தில் வெகு குறைவு. அப்படி வரலாற்று சிறப்பு மிக்க வள்ளல் சீதக்காதி வாழ்ந்த கட்டிடம் கீழக்கரை கடற்கரையோரம் உள்ளது. நாடு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் அடைந்த பிறகு அந்த இடத்தில் இருந்த கட்டிடத்தை அரசாங்கம் கீழக்கரை கஸ்டம்ஸ் அலுவலகமாக பயன்படுத்தி வந்தது. அந்த இடத்திலிருந்து கிழக்கு தெரு செல்லும் பாதை கஸ்டம்ஸ் தெரு என்றே பெயர் பெற்று விட்டது. தற்போது சுங்கத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கட்டிடம் சிதிலம் அடைந்து சின்னாபின்னமாக கிடக்கிறது. குப்பைகள் நிறைந்தும் கீழக்கரையின் கழிவுநீர் வாய்க்கால் அந்த இடத்தில் கடலில் கலந்தும் நாற்றம் எடுக்கிறது. படிகள் பழுதடைந்து பரிதாபமாக காட்சி அளிக்கிறது. சுற்றிலும் முட்புதர்கள் மண்டிக் கிடக்கிறது. சிதைந்த கட்டிடம் சமூக விரோதிகளின் இருப்பிடமாகி விட்டது. கடல் அரிப்பினாலும் கழிவுநீர் வாய்க்கால் அந்த இடத்தில் சேர்ந்து கடற்கரை பழைய பாலத்திற்கும் இடையே நடக்க முடியாமல் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சீதக்காதி வாழ்ந்த கட்டிடத்தை சீரமைத்து நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என கீழக்கரை மக்கள் வலியுறுத்தி உள்ளனர். கீழக்கரை மக்கள் கூறுகையில், வள்ளல் குணத்திற்கு உதாரணமாக சொல்லப்படும் சீதக்காதி வாழ்ந்த மாளிகை பாழடைந்து கிடப்பது வேதனையாக உள்ளது. பழமையை பாதுகாக்கும் வகையில் அவரது மாளிகையை புனரமைத்து வருங்கால தலைமுறைக்கு காட்சிப்படுத்த வேண்டும் என்றனர்.



Tags : Sita Khadi ,
× RELATED பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு