வெள்ளோடு பறவைகள் சரணாலயத்திற்கு ‘ராம்சார்’ சர்வதேச அங்கீகாரம்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி

ஈரோடு, ஆக.8: பெருந்துறை அருகே உள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயத்திற்கு ‘ராம்சார்’ சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், வடமுகம் கிராமத்திலுள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயம் (பெரிய குளம் ஏரி) பகுதிகளில் கடந்த 1980ம் ஆண்டு முதல் வனத்துறையின் சமூகநலக் காடுகள் கோட்டம் மூலமாக நாட்டுக் கருவேல மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், பெரிய குளம் ஏரியில் கட்லா, ரோகு, கெண்டை, விரால் போன்ற மீன் வகைகள் வளர்க்கப்பட்டு, அடர்ந்த நாட்டு கருவேல மரங்களால் சூழ்ந்து காட்சியளிக்கிறது.  இதனால், சாம்பல் நாரை, ராக்கொக்கு, பாம்பு தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், புள்ளி மூக்கு வாத்து, தட்டை வாயன், வெண்புருவ வாத்து, புள்ளி அலகு கூழைக்கடா போன்ற அயல்நாடு மற்றும் உள்நாட்டு பறவைகளுக்கு உகந்த வாழ்விடங்களில் ஒன்றாக இப்பகுதி மாறியது. தொடர்ந்து, பறவைகளின் எண்ணிக்கையில் மேம்பாடு பெற்று இப்பகுதி, உள்நாட்டு மற்றும் அயல் நாட்டு பறவைகளுக்கான இனப்பெருக்க தளமாகவும் மேன்மை பெற்றது.

இதன் தொடர்ச்சியாக, பெரிய குளம் ஏரி பகுதியானது கடந்த 2000ம் ஆண்டில், வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன் படி ‘வெள்ளோடு பறவைகள் சரணாலயம்’ என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஈரோடு வனக் கோட்டத்தின் மாவட்ட வன அலுவலர் கட்டுபாட்டில் செயல்பட்டு வருகிறது. கடந்த 2018-2019ம் ஆண்டு முதல் 2019-2020 வரை சூழல் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக சரணாலயம் மேலும் பொலிவு பெற்று, விருப்பத்துடன் பறவைகள் தேடி வரும் சரணாலயமானது. இதனை கருத்தில் கொண்டு வெள்ளோடு பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள பெரிய குளம் ஏரி, ஈரநில பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈர நிலமாக அங்கீகரிக்க, நடப்பு ஆண்டு அரசால் ‘ராம்சார்’ அமைப்புக்கு முன்மொழியப்பட்டது.  இதையடுத்து, வெள்ளோடு பறவைகள் சரணாலயத்துக்கு ‘சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலம்’ என கடந்த 3-8-2022 அன்று ‘ராம்சார்’ அமைப்பால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக வெள்ளோடு பறவைகள் சரணாலயம், சர்வதேச அளவில் பல்வகை உயிரினங்களின் வாழ்விடமாக திகழ்வதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ஈரோடு வன கோட்டம் தெரிவித்துள்ளது.

Related Stories: