மழை நீடிப்பு எதிரொலி; குமரியில் ஆறு, குளங்களில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் ஆய்வு

நாகர்கோவில், ஆக.8 : குமரி மாவட்டம் வந்துள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் ஆறு, குளங்களில் ஆய்வு மேற்கொண்டனர். தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த வாரம் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, நீலகிரி, தென்காசி மாவட்டங்களில் அதி தீவிர கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. இதையொட்டி குமரி மாவட்டத்துக்கும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு மாவட்ட நிர்வாகம், காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கண்காணிப்பு அலுவலர் ஜோதி நிர்மலா, குமரி மாவட்டம் வந்து கலெக்டர், எஸ்.பி. மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். 44 பேர் ெகாண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர், அரக்கோணத்தில் இருந்து வந்து தயார் நிலையில் இருந்தனர். இதே போல் காவல்துறை சார்பில் மீட்பு பணிகளை வேகமாக மேற்கொள்ளும் வகையில் மொத்தம் 10 குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

ேமலும் சென்னை ஆவடியில் உள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் ஒரு கம்பெனியினரும் (30 பேர்) குமரி மாவட்டம் வந்தனர். இவர்கள் தொடர்ந்து தற்போதும் குமரி மாவட்டத்தில் முகாமிட்டு நீர் நிலைகளில் ஆய்வு  செய்து வருகிறார்கள். சுசீந்திரத்தில் தங்கி உள்ள இந்த குழுவினர், தேரூர் பெரிய குளத்தை பார்வையிட்டு உடைப்பு ஏற்படும் நிலையில் இருந்த பகுதியை சீரமைத்தனர். மீட்பு உபகரணங்களுடன் சுசீந்திரத்தில் இவர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேற்கு திசை காற்றின் வேக வேறுபாட்டால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதிகளில் கன மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. குமரி மாவட்டத்திலும் 8, 9ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், மீட்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: