குமரியில் கைதான செயின் பறிப்பு கொள்ளையர்களின் கூட்டாளிகளை பிடிக்க தீவிரம்; காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

குளச்சல், ஆக.8 : குமரி மாவட்டத்தில் சமீப காலமாக செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.  கடந்த சில மாதங்களுக்கு முன் குளச்சல் வண்ணாத்திவிளை நரிக்கல் சாலையை சேர்ந்த சத்தியநேசன் மனைவி ரோஸ்லி (70) என்பவரின் பெட்டிக்கடைக்கு வந்த 2 மர்ம நபர்கள் சிகரெட் வாங்குவது போல் நடித்து ரோஸ்லி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை பறித்து விட்டு தப்பினர்.  குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து திருவனந்தபுரம் பேட்டை புன்னபுரத்தை சேர்ந்த வைஷாக் (32), சுனித் (32) ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் இரணியல், கொல்லங்கோடு, மணவாளக்குறிச்சி, கருங்கல், ராஜாக்கமங்கலம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுப்பட்டது தெரிய வந்தது. இரண்டு பேர் கொடுத்த தகவலின் பேரில் 25 பவுன் நகைகளை மீட்டனர்.

மேலும் அவர்கள் பயன்படுத்திய 2 பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் இரணியல் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் குமரி மாவட்டத்தில் நகைகளை திருடி, திருவனந்தபுரத்தில் உள்ள நகை கடையில் தான் விற்பனை செய்துள்ளனர். அதன் மூலம் இன்னும் 10 பவுன் நகைகள் மீட்கப்பட வேண்டி உள்ளது. வைஷாக், சுனித் கைதான தகவல் அறிந்ததும் நகை கடை உரிமையாளர் தலைமறைவாகி விட்டார்.  அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இதற்கிடையே வைஷாக், சுனித் இருவரின் கூட்டாளிகளும் குமரி மாவட்டத்துக்குள் ஊடுருவி கைவரிசை காட்டி வருகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்களை பற்றிய விபரங்களையும் தனிப்படை போலீசார் சேகரித்துள்ளனர். அவர்களையும் கைது ெசய்யும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைஷாக், சுனித் இருவரையும் காவலில் எடுக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: