திருவொற்றியூர் மண்டலம் 4வது வார்டில் கிடப்பில் மழைநீர் கால்வாய் பணி: விரைந்து முடிக்க கோரிக்கை

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம் 4வது வார்டில் கிடப்பில் போடப்பட்ட மழைநீர் காவல்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம், 4வது வார்டுக்கு உட்பட்ட எர்ணேஸ்வரர் கோயில் தெருவில் சுமார் 5000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதால், இப்பிரச்னைக்கு தீர்வாக, பல லட்சம் ரூபாய் செலவில் மழைநீர் கால்வாய் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டது.

இதன்படி, மழைநீர் கால்வாய் பிரிவு சார்பில், இந்த பகுதியில் பல தெருக்களில் பள்ளம் தோண்டப்பட்டு, கால்வாய் பணிகள் சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், பல்வேறு காரணங்களால், இந்த கால்வாய் பணியை முழுமையாக முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், திறந்து கிடக்கும் கால்வாயில் கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. எனவே, இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும், என சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாள் கணக்கில் இந்த கால்வாயில் கழிவுநீர் தேங்கி இருப்பதால், கொசு உற்பத்தி மற்றும் துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல் மற்றும் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், சிறுவர்கள் விளையாடும்போது திறந்து கிடக்கும் கால்வாயில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ள. எனவே இந்த மழைநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: