சென்னை எம்டிசி பஸ்களை தனியாருக்கு வழங்குவதா? அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி

சென்னை: சென்னை மாநகர பேருந்துகளை தனியாரிடம் வழங்கக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: உலக வங்கியுடன் தமிழ்நாடு அரசு கடந்த 6.12.2021 அன்று கையெழுத்திட்ட, சென்னை மாநகர கூட்டாண்மை: நீடித்த நகர்ப்புற சேவைகள் திட்டம் என்ற தலைப்பிலான ஒப்பந்தத்தின் சில பிரிவுகள் தான் இதற்கு காரணம். இந்த ஒப்பந்தத்தின்படி சென்னையில் போக்குவரத்து சேவை, நடைபாதை கட்டமைப்புகள், பொது இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசுக்கு உலக வங்கி ரூ.12,000 கடன் வழங்கும்.

இத்திட்டத்தின் ஓர் அங்கமாக சென்னையில் மொத்த செலவு ஒப்பந்தத்தின்படி 1000 பேருந்துகள் புதிதாக வாங்கி இயக்கப்படும். இவற்றை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் இயக்காது. மாறாக, மாநகர போக்குவரத்து கழகத்தால் தேர்ந்தெடுக்கப்படும் தனியார் போக்குவரத்து நிறுவனம் தான் புதிய பேருந்துகளை இயக்கும். மாநகர போக்குவரத்து கழகம் உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழகங்கள் நேரடியாக இயக்கும் பேருந்துகளை விட, தனியார் மூலம் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, கூடுதல் கட்டணம் வசூலித்தல், போதிய வருவாய் கிடைக்காத வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க மறுத்தல் போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும். அப்போது அதை தீர்க்க முடியாமல் அரசு தடுமாற நேரிடும்.

உலகில் மிகச்சிறப்பான பொது போக்குவரத்து கட்டமைப்பை கொண்டிருக்கும் பெரு நகரங்களில் சென்னை மாநகரமும் ஒன்றாகும். 50 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் மாநகர போக்குவரத்து கழகத்தையும், பின்னர் படிப்படியாக பிற போக்குவரத்து கழகங்களையும் தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். அரசு போக்குவரத்து கழகங்களின் கட்டமைப்பை மேம்படுத்தி தமிழ்நாட்டு மக்களுக்கு சிறப்பான சேவை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: