தேவதானப்பட்டி அருகே சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை

தேவதானப்பட்டி, ஆக 6: சில்வார்பட்டி முனையடுவநாயனார் கோவிலில் நேற்று 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை நடைபெற்றது.  காலையில் விநாயகர், முருகன், காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, முனையடுவநாயனார், நடராஜர், சிவகாமியம்மாள், மாணிக்கவாசகர், சண்டிகேஸ்வரர், தட்சணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்கை உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு, மஞ்சள்பொடி, மாபொடி, திருமஞ்சனதிரவியம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் இவைகளால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.பின்னர் சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்க்கை வரலாறு சொற்பொழிவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சின்னமனூர், தேனி, பெரியகுளம், வடுகபட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர். பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, சிவனடியார்களால் திருமுறைகள் பாடப்பட்டது. சிவனடியார்களுக்கு மகேஸ்வரபூஜை நடத்தப்பட்டது. கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சிவனடியார் சேதுராமன் குடும்பத்தார் செய்திருந்தனர்.

Related Stories: