வாசித்தல் மாரத்தானில் மதுரை மாவட்டம் சாம்பியன் கல்வி அலுவலர்களுக்கு கலெக்டர் விருது

மதுரை, ஆக. 6: வாசித்தல் மாரத்தானில் மதுரை மாவட்டம் சாம்பியன் ஷிப் பட்டம் பெற உறுதுணையாக இருந்த கல்வி அலுவலர்களுக்கு கலெக்டர் அனீஷ்சேகர் விருதுகள் வழங்கி கவுரவித்தார். மதுரையில் இல்லம் தேடிக் கல்வி ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் நடந்தது. மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா வரவேற்றார். கூடுதல் கலெக்டர் சரவணன், கலெக்டரின் நேர்முகஉதவியாளர்(பொது) மாறன், இல்லம் தேடிக்கல்வி மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர் கணேசன் முன்னிலை வகித்தனர். வாசித்தல் மாரத்தானில் மதுரை மாவட்டம் சாம்பியன் ஷிப் பட்டம் வென்றதற்கு உறுதுணையாக இருந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள்(பொ), மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு மாவட்ட கலெக்டர் விருதுகள் வழங்கி கவுரவித்தார். இதேபோல், 15 ஒன்றியங்களில் உள்ள இல்லம் தேடிக்கல்வி மாணவர்களுக்கு விதையுடன் கூடிய விதைப்பைகள் வழங்கப்பட்டிருந்தது.

இதனை வளர்த்து மரக்கன்றுகளாக உருவாக்கி பள்ளிகள், ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வழங்கிய, திருமங்கலம் இல்லம் தேடிக்கல்வி மைய மாணவர்கள் அகிலேஷ், சூர்யா ஆகியோருக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.மேலும் முகநூல் வழியாக கற்றல், கற்பித்தல் உபகரணங்களை காட்சிப்படுத்தி, சென்னையில் நடந்த புத்தக கண்காட்சி அரங்கத்தை அலங்கரித்த தன்னார்வலர்கள் அலங்காநல்லூர் நல்லம்மாள், திருமங்கலம் நாகபிரீதி ஆகியோருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்வித்துறை அலுவலர்கள், இல்லம்தேடி கல்விக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் குருநாதன் நன்றி கூறினார்.

Related Stories: