செட்டிகுளம் அரசு உதவி பெறும் பள்ளி விவகாரம்: அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை

திருமங்கலம், ஆக. 6: திருமங்கலம் அருகேயுள்ள கரடிக்கல் ஊராட்சிக்குட்பட்ட செட்டிகுளத்தில் தனியார் துவக்கப்பள்ளி உள்ளது. இதில் 52 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். பள்ளி கட்டிடம் பலத்த சேதமடைந்திருப்பதால் தங்கள் குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்ப மறுத்து வருகின்றனர். இந்நிலையில் திருமங்கலம் கோட்டாச்சியர் அபிநயா தலைமையில் கோட்டாச்சியர் அலுவலத்தில் பள்ளி குறித்த அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் கிராமமக்கள், பள்ளி நிர்வாகம் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். இதில் செட்டிகுளம் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் டிசி வாங்கி அருகேயுள்ள பள்ளியில் சேர்ப்பது எனவும், ஓராண்டில் தனியார் பள்ளி நிறுவனம் புதிய கட்டிடம் கட்டிதருவது எனவும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதற்கு கிராமமக்கள் அருகேயுள்ள பள்ளிக்கு தான் குழந்தைகளை அனுப்புவோம், 4 கிமீ தூரத்தினை தாண்டியுள்ள கரடிக்கல், உச்சப்பட்டி பள்ளிகளுக்கு அனுப்பமாட்டோம், குழந்தைகள் செல்லும் போது விபத்துகள் ஏற்படகூடிய வாய்ப்புகள் உள்ளது என கூறினர். எனவே அரசு சேதமடைந்த பள்ளி கட்டிடத்தினை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் அல்லது தமிழக அரசே பள்ளியை ஏற்று நடத்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனால் எந்தமுடிவுகளும் எடுக்கமுடியாமல் ஆர்டிஓ தலைமையில் நடந்த கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.

Related Stories: