×

ஏரல் சுற்று வட்டார பகுதியில் முருங்கை சாகுபடிக்கு மாறும் வாழை விவசாயிகள் போதிய லாபம் இல்லாததால் மாற்றுத் தொழில்

ஏரல், ஆக. 6: ஏரல் சுற்று வட்டார பகுதிகளில் வாழை சாகுபடியில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காததால் விவசாயிகள் முருங்கை விவசாயத்திற்கு மாறி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான சிறுத்தொண்டநல்லூர், மணலூர், சூளைவாய்க்கால், மொட்டத்தாதன்விளை, சக்கம்மாள்புரம், கொத்தலரிவிளை, வலசக்காரன்விளை, திருப்பணிசெட்டிகுளம், சுப்பிரமணியபுரம், நட்டாத்தி உள்ளிட்ட பகுதி புஞ்சை நிலங்களில் விவசாயிகள் அதிகளவு வாழை பயிர் செய்து வந்தனர்.

கடந்த 40 வருடங்களுக்கு முன் இப்பகுதியில் உள்ள செம்மண் நிலப்பரப்பில் நாட்டு உடைமரங்கள் அதிகளவு இருந்து வந்ததால் விவசாயிகள் இந்த நாட்டு உடைமரங்களை வெட்டி அந்த நிலப்பரப்பில் கோழிக்கூடு, நாடு உள்ளிட்ட வாழை ரகங்களை பயிர் செய்து வந்தனர். மண்ணில் உயிர்சத்து அதிகமாக இருந்ததால் இப்பகுதியில் வாழை செழித்து வளர்ந்தது.
வாழைத்தார் வெட்டி சுமக்கும் தொழிலாளர்கள் ஒரு வாழைத்தாரை சுமந்து வாகனத்தில் ஏற்றுவதற்காக ரோட்டுக்கு சுமந்து கொண்டு வருவதே கடினமாக இருந்தது.

அந்த அளவிற்கு இப்பகுதியில் வாழைத்தார் பெரிய அளவாக இருந்தது. இங்கு விளையும் வாழைத்தார் சென்னை, மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை உட்பட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. இதனால் விவசாயிகளுக்கு வாழையை வைத்து நல்ல லாபம் கிடைத்து வந்தது. ஆனால் நாளடைவில் இந்த வாழைகள் சரிவர இப்பகுதியில் வளராததினால் நோய் தாக்கி நஷ்டம் ஏற்படத் தொடங்கியது.

இதனால் கடந்த 15 வருடங்களுக்கு முன் சக்கை என மாற்று ரக வாழை பயிர் செய்ய தொடங்கினர். இது ஓரளவு விவசாயிகளுக்கு கை கொடுத்து வந்த நிலையில் இப்பகுதியில் நிலத்தடி நீர் உப்பாக மாறிவருவதால் இந்த வாழைகளும் சரிவர வளராமல் கருகத் தொடங்கியது. இதனால் உற்பத்தி செலவு அதிகமாகி கொண்டே போவதாலும், வாழைத்தார்களும் சரியான விலைக்கு விற்காமல் போனதாலும் விவசாயிகள் செலவழித்த பணம் கூட கை சேர வழியின்றி சிரமப்பட்டு வந்தனர். மேலும் வாழைகளுக்கு தண்ணீர் பாய்ச்சிட, உரம் போட, களை எடுத்திட முன்பு போல் வேலை ஆட்கள் கிடைப்பதில்லை.

இதன் காரணமாக இப்பகுதி விவசாயிகள் வாழை சாகுபடியை கைவிட்டு முருங்கை விவசாயத்திற்கு மாறியுள்ளனர். இதற்கு முன் ஒருசில இடங்களில் மட்டுமே முருங்கை பயிரிட்டு வந்த நிலையில், தற்போது இப்பகுதியில் பெரும்பாலான இடங்களில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவுக்கு மேல் முருங்கை விவசாயம் செய்துள்ளனர். முருங்கை விதை ஊன்றியதில் இருந்து 4 மாதத்தில் காய் பறிக்கலாம். மாதத்தில் ஏக்கருக்கு ரூ.14 ஆயிரம் வரை கட்டுக்குத்தகைக்கு எடுத்து முருங்கை விவசாயத்தை மேற்கொள்கின்றனர். முதலில் விதை ஊன்றியதில் இருந்து வாரம் 3 முறை என தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

பின்னர் முருங்கை வளர்ந்தவுடன் வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினாலே போதுமானது. 15 நாட்களுக்கு ஒருமுறை முருங்கை மரத்திற்கு மருந்து தெளிக்க வேண்டும். இல்லாவிட்டால் பூச்சிகள் முருங்கை பூ, இலைகளை தின்று முருங்கை மரத்தையே அழித்துவிடும். இதனால் பெருமளவு மகசூல் பாதிக்கப்படும். இங்கு பறிக்கப்படும் முருங்கை காய்களை சாக்குபைகளில் அடைத்து நெல்லை நயினார்குளம் மார்க்கெட், பாவூர்சத்திரம் மார்க்கெட் என விவசாயிகள் அனுப்பி வைக்கின்றனர். மேலும் வியாபாரிகளும் விவசாயிகளிடம் முருங்கை காய்களை நேரிடையாக வந்து வாங்கி சென்னைக்கு அனுப்பி வியாபாரம் செய்து வருகின்றனர்.

மழைக் காலத்தில் முருங்கை மரம் அனைத்தும் இலைகளை உதிர்த்துவிட்டு பட்டமரம் போல் ஆகிவிடும். அந்த காலத்தில் விவசாயிகள் வருமானம் இல்லாமல் இருப்பதை தவிர்த்திட முருங்கையில் ஊடுபயிராக புடலங்காய் விதையை ஊன்றி இதில் படர வைத்து புடலங்காய் விவசாயம் செய்து ஓரளவு லாபம் பார்த்து வருகின்றனர். மொத்தத்தில் ஏரல் பகுதியில் வயல் வெளிகளில் மட்டுமே தற்போது வாழை விவசாயம் நடந்து வருகிறது. புஞ்சை நிலங்களில் வாழையை விட முருங்கை சாகுபடியை அதிகம் காண முடிகிறது.

‘‘மானியத்தில் உரம், பூச்சிமருந்து''
முருங்கை விவசாயி மொட்டத்தாதன்விளை சன்னியாசிமுத்து கூறுகையில், ‘நாங்கள் இப்பகுதியில் தலைமுறை தலைமுறையாக வாழை பயிர் செய்துவந்தோம். தொடர்ச்சியாக நஷ்டத்தை இத்தொழிலில் சந்தித்து வந்ததால் உற்பத்தி செலவு குறைவாக எந்த விவசாயம் செய்யலாம் என யோசித்து இந்த முருங்கையை பயிரிட்டு வருகிறோம். முருங்கையை வளர்க்க அப்பகுதியில் போர் போட்டு ஆயில் இன்ஜின் மூலம் சொட்டு நீர்ப்பாசனத்தில் தண்ணீர் பாய்ச்சி வருகிறோம். மருந்து தெளிக்க 10 நாட்களுக்கு ஒருமுறை செலவு செய்ய வேண்டும். மேலும் உரமிடுதல் உள்ளிட்ட செலவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

தற்போது கோடை காலம் என்பதால் முருங்கை காய்கள் நல்ல திரட்சியுடன் காணப்படுகின்றன. முருங்கைக் காய் கிலோ தற்போது ரூ.18 முதல் ரூ.20 வரை செல்கிறது. ஓரளவு விலை இருப்பதால் எங்களுக்கு லாபம் கிடைத்து வருகிறது. இதேநிலை தொடர்ந்து நீடிக்கும் என்று சொல்ல முடியாது. ஏன் என்றால் இந்த விலை நிரந்தரம் கிடையாது. நாளைக்கு அடிமாட்டு விலைக்குகூட முருங்கைகாய் சென்றுவிடும். அப்போது பறிப்பு கூலிக்கே விலை கிடைக்காத நிலை ஏற்படும். மேலும் மழை காலத்தில் முருங்கை பூக்கள் அனைத்தும் உதிர்ந்துவிடுவதால் அன்றைய காலக்கட்டத்தில் முருங்கை காய் கிடைப்பதில்லை. எனவே அரசு முருங்கை விவசாயிகளுக்கு மானியத்தில் உரம், பூச்சி மருந்து வழங்குவதுடன் போதிய கடன் வசதியும் செய்து கொடுத்திட வேண்டும்' என்றார்.

Tags : Eral district ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு