மண்சரிந்த இடத்தில் பணிகள் முடிந்தது தாண்டிக்குடி மலைச்சாலையில் மீண்டும் போக்குவரத்து துவங்கியது

பட்டிவீரன்பட்டி, ஆக. 6: மண்சரிந்த இடத்தில் பராமரிப்பு பணிகள் முடிந்ததால் பெரும்பாறை, தாண்டிக்குடி மலைச்சாலையில் மீண்டும் வாகன போக்குவரத்து துவங்கியது. பட்டிவீரன்பட்டி அருகே பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களங்கொம்பு, மஞ்சள்பரப்பு, பண்ணைக்காடு, கே.சி.பட்டி, பாச்சலூர், கடுகுதடி உள்ளிட்ட மலை கிராமங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை 29ம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக பெரும்பாறை- தாண்டிக்குடி மலைச்சாலையில்   பட்டலாங்காடு எனும் இடத்தில் மழை தண்ணீர் அதிகளவு சென்றதால் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் மண்சரிந்து விழுந்ததில் ரோட்டின் பக்கவாட்டு பகுதியை காட்டாற்று தண்ணீர் அடித்து சென்று விட்டது. இதன் காரணமாக பெரும்பாறையிலிருந்து தாண்டிக்குடி, பண்ணைக்காடு செல்லும் சாலையில் 1 வாரமாக போக்குவத்து நிறுத்தப்பட்டது. இதனால் இந்த சாலையை பயன்படுத்தி வந்த பொதுமக்கள், விவசாயிகள், கூலித்தொழிலாளிகள் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 1 வாரகாலமாக ஆத்தூர் உட்கோட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்ற பாராமரிப்பு பணிகள் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. தொடர்ந்து அச்சாலையில் கார், மினிலாரி போன்ற வாகனங்கள் இயக்கப்பட்டன. இன்று முதல் (6.8.22) பஸ் போக்குவரத்து தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: