×

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது நெல்லை ராணி அண்ணா கல்லூரியில் 67 பேருக்கு சீட்

நெல்லை, ஆக. 6: தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., பி.பி.ஏ., பி.சி.ஏ. போன்ற இளநிலை பட்ட படிப்புகளில் உள்ள ஒரு லட்சத்து 20 ஆயிரம் இடங்களில் சேர 2 லட்சத்து 98 ஆயிரம் பேர் கட்டணம் செலுத்தி முழுமையாக விண்ணப்பங்களை பதிவு செய்திருந்தனர். இதில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் இடங்களுக்கு தகுதியானவர்களாக கருதி, அவர்களுக்கான இறுதி தரவரிசைபட்டியல் கடந்த 3ம் தேதி வெளியானது. இதைத்தொடர்ந்து அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.

நெல்லை அருகே பழைய பேட்டை ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் நேற்று நடந்த கலந்தாய்வில் பி.ஏ.(தமிழ் மற்றும் ஆங்கிலம்) மற்றும் பி.காம், ஜியாலஜி பாடங்களில் 256 இடங்களுக்கு, ஆயிரக்கணக்கான மாணவிகள் குவிந்தனர். இதில் கலந்தாய்வு விதிமுறைகளை சுட்டிக்காட்டி 67 பேர் மட்டுமே சீட் வழங்கப்பட்டது. 100க்கு 98 மதிப்பெண் பெற்ற மாணவிகளும், 90க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவர்களும் சீட் கேட்டு முண்டியடித்தனர். ஆனால் சீட் கிடைக்காத நிலையில் பெற்றோர்களும், மாணவிகளும் ஏமாற்றத்தோடு திரும்பினர். அதிலும் பி.ஏ. ஆங்கிலத்தில் 4 பேருக்கு மட்டுமே சீட் கிடைத்தது. ராணி அண்ணா கல்லூரியில் இன்று இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் பாடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.

 ஆலங்குளம், மானூர், சாத்தான்குளம், சங்கரன்கோவில், கோவில்பட்டி அரசு கலை கல்லூரிகளிலும் நேற்று கலந்தாய்வு நடந்தது. முதல்கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்கள், 2ம் கட்ட கலந்தாய்விலும், அதிலும் நிரம்பாத இடங்கள் 3ம் கட்டத்திலும் நிரப்பப்பட உள்ளது. இறுதியாக எந்ததேதியில் மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்கவேண்டும் என்பதை உயர்கல்வித் துறை அறிவிக்கும். கடந்த சில ஆண்டுகளாகவே கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு கடும் போட்டி காணப்படுகிறது. கலந்தாய்வு நேற்று தொடங்கியுள்ள நிலையில், அரசு கல்லூரிகளில் இடம் பிடிக்க மாணவ, மாணவிகள் அலைமோதி வருகின்றனர். ஒவ்வொரு பாடப்பிரிவிலும் காலியாக உள்ள இடங்களை முறையாக அறிவித்து மாணவர்கள் சேர்க்கையை நடத்திட வேண்டும் என்பது மாணவ, மாணவிகளின் விருப்பமாக உள்ளது.

Tags : Nellai Rani Anna College ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...