×

40 வேளாண்மை பொருட்கள் விற்பதற்கு ஏற்பாடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 31 ஆயிரம் மெட்ரிக் டன் இருப்பு வைக்க வசதி

கடலூர், ஆக. 6: ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 31 ஆயிரம் மெட்ரிக் டன் விளைபொருட்களை இருப்பு வைக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் இயங்கும் கடலூர் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் கடலூர் மாவட்டத்தில் 10 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. விரைவில் 11வது ஒழுங்குமுறை விற்பனைக்கூடமான வேப்பூரில் புதிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கட்டுமான பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.

கடலூர் முதுநகர், பண்ருட்டி, விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, திருமுட்டம், சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, புவனகிரி மற்றும் சிதம்பரம் ஆகிய விற்பனைக்கூடங்களுக்கு நெல், மணிலா, எள், உளுந்து, பச்சைப்பயறு, கம்பு, ராகி, வரகு, முந்திரி, மக்காச்சோளம் மற்றும் தேங்காய் முதலிய 40 வேளாண் விளைபொருட்கள் தமிழக அரசால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. மேற்படி விவசாய விளைபொருட்கள் மறைமுக ஏலம் மூலம் போட்டி விலையில் விற்பனை செய்து விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காட்டுமன்னார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெறுகிறது. பருத்தி விவசாயிகள் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர். உடனடியாக பணம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. மேலும், நல்ல விலை கிடைக்காத விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இம்மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இருப்பு வைப்பதற்கு 31,100 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிட்டங்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. கிட்டங்கிகளில் முதல் 15 நாட்களுக்கு இலவசமாகவும், பின்னர் விவசாயிகளின் விருப்பத்தின் பேரில் 180 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு குவிண்டாலுக்கு 0.10 பைசா வாடகைக்கு இருப்பு வைத்து சந்தையில் விலை உயரும் போது விற்பனை செய்யவும் வசதிகள் உள்ளன.

ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உலர்களம், இருப்பு வைக்கப்படும். விளைபொருட்களுக்கு காப்பீடு போன்ற வசதிகள் வழங்கப்படுகிறது. விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்து பயனடைய வேண்டும் என கடலூர் விற்பனைக்குழு செயலாளர் விஜயா கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags :
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...