மண்ணச்சநல்லூர் அருகே துணிகரம் அரசு பஸ் டிரைவர் வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு

மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் அருகே அரசு பஸ் டிரைவர் வீட்டில் 20 பவுன் நகைகள் மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள திருவள்ளுவர் அவென்யூ வெங்கடேஷ்வரா நகரை சேர்ந்தவர் தமிழரசு (57). அரசு பஸ் டிரைவர். கடந்த 2ம் தேதி சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்ற தமிழரசு நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறைகளில் வைக்கப்பட்டிருந்த 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே கீழே சிதறி கிடந்தன. பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க மோதிரம், வளையல், தங்க சங்கிலி உள்ளிட்ட 20 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கொள்ளிடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வந்து திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டை அரங்கேற்றி இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து தமிழரசு அளித்த புகாரின்பேரில் கொள்ளிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: