×

ராஜபாளையத்தில் பல்வேறு திறன்களில் 9 பேர் அசத்தல் நோபள் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனை புத்தகத்தில் பதிவு

ராஜபாளையம்: ராஜபாளையம் ரமணா ஸ்போர்ட்ஸ் கிளப் வளாகத்தில் 9 பேர் தனித்தனியாக தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி நோபள் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தக சாதனை புரிந்தனர். இதன்படி முதலாவதாக 66 கிலோ எடை கொண்ட டாக்டர் யமுனா (36) என்பவர், சுவற்றில் சாய்ந்து குத்து காலிட்டு அமர்ந்தபடியே, தன் மடியில் 100 கிலோ எடையை ஒரு நிமிடம் 21 வினாடி தாங்கிப் பிடித்தபடி சாதனை புரிந்தார். இதையடுத்து 65 கிலோ எடையுடைய ராஜேஸ்வரி (36) என்பவர், தனது கைகள் இரண்டையும் தரையில் முழங்காலிட்டு, கால்களை நீட்டி அவரது முதுகில் 80 கிலோ எடையை 43 வினாடிகள் தாங்கி சாதனை படைத்தார். இதேபோல் பிரபாகரன் (49) என்பவர் 70 கிலோ எடையை தண்டால் (பிளாங் புஷப்ஸ்) என்ற முறையில் ஒரு நிமிடம் 19 வினாடிகள் செய்து சாதனை படைத்தார். கருப்பசாமி (41) ஜம்ப் பண்ணி தண்டால் செய்து 30 வினாடிகளில் 16 முறை செய்து சாதனை புரிந்தார். ராமசுப்பிரமணியம் (47) என்பவர் 70 கிலோ எடையுள்ள ஒரு மனிதரை தன் மீது படுக்க வைத்து 1.17 வினாடிகளில் தாங்கி சாதனை படைத்தார். சரவணன் ஐயப்பன் என்பவர் (43), 70 கிலோ எடையை 31 முறை ஜம்பிங் செய்து சாதனை படைத்தார். சங்கர் கணேஷ் என்பவர் (47), பிஷப்ஸ் மூலம் மூன்று பேரை தன்மேல் தண்டால் எடுப்பது போல் வைத்து, 173 கிலோ எடையை 1.7 நிமிடம் தாங்கி சாதனை படைத்தார். சிவகனேஷ் (22) இரண்டு கைகளிலும் 10 கிலோ எடையை தூக்கிக் கொண்டு மொத்தம் 20 கிலோ எடையை கையில் உயர்த்தி, ஜம்பிங் செய்து 43 வினாடியில் 32 முறை செய்து சாதனை படைத்தார். இவர்களை எல்லாம் ஒருங்கிணைத்த பயிற்சியாளர் நாகராஜ் (57) என்பவர், ஏணிப்படிகள் மீது 20 அடி உயரத்தில் இரண்டு கைகளை வைத்து மேலேயும் கீழேயும் சென்று 21 வினாடிகள் சாதனை படைத்தார். இவர்கள் அனைவரும் நோபாள் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர். நடுவர்களாக இருந்த அரவிந்த், வினோத், ஹேமத்குமார் ஆகியோர் அனைவருக்கும் சான்றிதழ்கள், பதக்கங்களை வழங்கி பாராட்டினர். இந்த நிகழ்ச்சியை கண்காணிக்க நாகராஜ் என்பவரை தேர்வு செய்து, அவர்களுக்கு அதற்கான அடையாள அட்டையும் வழங்கி கௌரவித்தனர். சாதனையாளர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags : Rajapalayam ,
× RELATED ராஜபாளையம் ஏகேடி தர்மராஜா மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா