தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்புவில் வரலாற்று சிறப்புமிக்க சவுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு மேல் அங்குரார்ப்பணம், வாஸ்துசாந்தி ஆகியவை நடைபெற்றது. நேற்று காலை 7.30 மணியிலிருந்து 9.00 மணிக்குள்ளாக கொடியேற்றமும், சூரியபிரபை, சந்திர பிரபை வாகனங்களில் சவுந்தரராஜபெருமாள் எழுந்தருளி தேரோடும் வீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இன்று (ஆக. 5) மாலை 6 மணிக்கு அன்னவாகனத்திலும், நாளை இரவு சிம்ம வாகனத்திலும், அடுத்தடுத்த நாட்களில் கருட, சேஷ, யானை வாகனங்களிலும் உலாவருகிறார். வரும் 10ம் தேதி ஆடி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சவுந்தரராஜ பெருமாளுக்கும், சவுந்தரவள்ளி தாயார் மற்றும் ஆண்டாளுக்கும் மாலை 6.30 மணியிலிருந்து 7.30 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து சவுந்தரராஜ பெருமாள், சவுந்தரவள்ளி தாயார், ஆண்டாள், பூதேவி மற்றும் தேவி சமேதமாக தம்பதியர் கோலத்தில் இரவு பூப்பல்லக்கில் எழுந்தருளி தேரோடும் வீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அடுத்த நாள் (ஆக. 11) இரவு குதிரை வாகனத்தில் உலாவருதல் நடக்கிறது. எதிர்வரும் 12ம் தேதி மாலை 4.30 மணியளவில் ஆடித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற உள்ளது. தேரோட்டத்தை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கலெக்டர் விசாகன் உள்பட பலர் கலந்து கொண்டு தொடங்கி வைக்க உள்ளனர். அதற்கடுத்த நாளில் அவரோகணம் நிகழ்ச்சி, தீர்த்தவாரியும், 14ம் தேதி மாலை தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் மற்றும் உதவி ஆணையர் சுரேஷ், இணை ஆணையர் பாரதி, செயல் அலுவலர் முருகன், கோயில் பட்டாச்சாரியார்கள் வெங்கட்ராமன், ராமமூர்த்தி, ஜெகநாதன், ரமேஷ் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: