திருப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்ற வாலிபர் கைது

திருப்பூர்: திருப்பூரில் வாடகை வீடு எடுத்து தங்கி, கஞ்சா விற்ற மதுரை வாலிபரை போலீசார்  கைது செய்தனர். திருப்பூர், மங்கலம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மங்கலம் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டு கண்காணித்தனர். அப்போது, பெத்தாம்பூச்சிபாளையம், பகுதியில் ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். இதில், அந்த வீட்டில் 2.5 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அங்கிருந்த வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி, கீழ்நாச்சிகுளம் பகுதியை சேர்ந்த சுல்தான் மைதீன் என்பவரின் மகன் மாலிக் பாஷா (25) என்பதும், திருப்பூர் பெத்தாம்பூச்சிபாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மங்கலம் போலீசார் வழக்குபதிந்து மாலிக் பாஷாவை கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: