×

கல்லணை கொள்ளிடம் பகுதிகளில் வெள்ள அபாயம் தடுக்க முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

திருக்காட்டுப்பள்ளி, ஆக.5: கல்லணை கொள்ளிடம் பகுதிகளில் வெள்ள அபாயத்தை தடுக்க முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வெள்ளம் வந்தால் தடுப்பதற்காக கடலோர பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. திருக்காட்டுப்பள்ளி அருகே கரிகாலன் கட்டிய கல்லணையில் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் பிரிவு ஆறுகள் செல்கிறது.கடந்த வாரத்தில் கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டு மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. மேட்டூர் அணை நிலவரம் நீர் மட்டம் : 120.13. நீர் வரத்து : 148657 கனஅடி, நீர் வெளியேற்றம்: 147660 கனஅடி. இந்நிலையில் மேட்டூரில் இருந்து வெளியேற்றப்படும் காவிரி நீர், முக்கொம்பு வழியாக கல்லணை, கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் படிப்படியாக குறைந்தது. ஆனால் மீண்டும் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், அந்த தண்ணீர் மேட்டூர் வழியாக திறந்து விடப்பட்டு முக்கொம்பு காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணை கொள்ளிடத்தில் வெள்ள நீராக கரைபுரண்டு ஓடுகிறது.

நேற்று காலை கொள்ளிடத்தில் 30056 கன அடி தண்ணீரும், மணற்போக்கியில் 10159 கன அடி தண்ணீரும் காலையில் திறக்கப்பட்டது. விவசாயத்திற்காக காவிரியில் 7003 கன அடி தண்ணீரும், வெண்ணாறில் 7005 கன அடி தண்ணீரும், கல்லணைக் கால்வாயில் 22 19 கன அடி தண்ணீரும் கோவிலடி வாய்க்காலில் 15 கன அடி தண்ணீரும் பிள்ளை வாய்க்காலில் 10 கன அடி தண்ணீரும் மொத்தம் 56,467 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆனால் மாலையில் தண்ணிரின் வரத்து அதிகமாகவே முக்கொம்பில் 90,405 கன அடி தண்ணீரும், கல்லணை கொள்ளிடத்தில் 40,215 கன அடி தண்ணீரும், நோட்டாமையில் 3700 கன அடி தண்ணீரும் மொத்தமாக 1,34, 320 கன அடி தண்ணீர் வெள்ள நீராக திறக்கப்பட்டு சென்று கொண்டுள்ளது.

மேலும் நீரின் வரத்து அதிகரிக்கக் கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது. கொள்ளிடத்தில் வெள்ள நீர் ஆற்றில் கரை புரண்டு செல்வதால் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். கரையோரங்களில் உள்ள பொதுமக்கள் உடனே மாற்று இடத்திற்கு செல்லுமாறும், ஆடு, மாடு கோழி உள்ளிட்ட வைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் தஞ்சாவூர் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் கரையோர பகுதிகளில் இரவு, பகல் பாராமல் தினமும் வெள்ள அபாயம் நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். கரையோரத்தில் தடுப்புகள் உடைப்பு ஏதாவது உள்ளதா, கரை புரண்டு ஓடும் காவிரி நீர் உடைப்பு மூலம் வெளியேற வாய்ப்பு உள்ளதா என்பது குறித்தும் அடிக்கடி விசாரித்து அதற்குரிய தீர்வுகளை செய்து வருகின்றனர். மேலும் கல்லணை கொள்ளிடத்தில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருவதாக அதிகாரிகள் மட்டத்தில் கூறப்படுகிறது.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கரையோர மக்களை நேரில் சந்தித்து வெள்ள அபாயம் குறித்து எடுத்து கூறினார். மேலும் வெள்ள அபாயத்தை தடுப்பதற்காக கரையோர பகுதிகளில் இறக்கி வைக்கப்பட்டிருக்கும் மணல் மூட்டைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வெள்ள அபாயம் ஏற்படாதவகையில் முன்னேற்பாட்டு பணிகளை விரைந்து செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் வீராகண் ஊராட்சி வாண்டையார் இருப்பு பகுதியில் கல்லணையில் காவிரி பிடிப்பு பகுதிகளில் அதிக மழை காரணமாக கொள்ளிடம் கரையோரம் பகுதிகளில் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதை தலைமை கொறடா கோவி,செழியன் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ஐயம் பெருமாள், கும்பகோணம் ஆர்டிஓ லதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kallanai Kollidam ,
× RELATED கல்லணை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே...