×

மேட்டூரில் பாதுகாப்பு பணிகளை எஸ்பி ஆய்வு

மேட்டூர், ஆக.5: மேட்டூரில் பாதுகாப்பு பணிகளை சேலம் மாவட்ட எஸ்பி ஸ்ரீ அபிநவ் ஆய்வு செய்தார். மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 லட்சம் கன அடிக்கு மேல் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்பு துறை, நீர்வளத் துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்பணிகளை ஆய்வு செய்ய நேற்று சேலம் மாவட்ட எஸ்பி ஸ்ரீ அபிநவ், மேட்டூருக்கு நேற்று சென்றார். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளையும், துண்டிக்கப்பட்ட மேட்டூர்- எடப்பாடி சாலையும் பார்வையிட்டார்.

பின்னர். அவர் நிருபர்களிடம் கூறுகையில், வெள்ளநீர் அதிக அளவில் வெளியேற்றப்படுவதால், பாதுகாப்புக்காக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். உயிர் காக்கும் நவீன சாதனங்களுடன் தயார் நிலையில் மீட்பு படையினர் வைக்கப்பட்டுள்ளனர். மேட்டூர், பூலாம்பட்டி காவிரி கரைப்பகுதிகளில் மீட்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றார். மேட்டூர் தாசில்தார் முத்துராஜா கூறுகையில், மேட்டூர் காவிரி கரையில் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களை தங்க வைக்க தூக்கணாம்பட்டி நகராட்சி பள்ளி, பாப்பம்மாள் திருமண மண்டபம், தங்கமாபுரிபட்டினம் நகராட்சி பள்ளியில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அந்த முகாம்களில் தங்க பாதிக்கப்பட்டவர்கள் எவரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. அவர்கள் தங்கள் உறவினர்கள் வீடுகளுக்கு செல்வதாக கூறி சென்று விட்டனர். வருவாய்த்துறை காவல்துறை எச்சரிக்கையை மீறி, சிலர் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் இரவில் தங்கி உள்ளனர் என்றார்.

Tags : SP ,Mettur ,
× RELATED பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க...