சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலைக்கு சிலை அமைக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் கொங்குநாடு விவசாயிகள் கட்சி தீர்மானம்

திருப்பூர், ஆக.4: திருப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலைக்கு சிலை அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று கொங்குநாடு விவசாயிகள் கட்சி சார்பில் நடந்த 217 வது நினைவு நாள் நிகழ்ச்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலையின் 217வது நினைவுநாள் நிகழ்ச்சி கொங்குநாடு விவசாயிகள் கட்சி சார்பில் திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில், அக்கட்சியின் மாநில தலைவர் கொங்கு வி.கே.முருகேசன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கொங்கு எம்.ராஜாமணி வரவேற்றார். பொருளாளர் ஏ.என்.செல்வராஜ், கவுரவ தலைவர் கே.எம்.முருகேசன், துணைத்தலைவர் என்.எம்.ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலதிபர்கள் சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம், ஜெயசித்ரா சண்முகம், விவித் வாசு, ராசி சிதம்பரம், கே.ஆர்.பி.செல்வராஜ், பிர்லி துரைசாமி, பிர்லி கந்தசாமி, லீட்ஸ் நடராஜன், பத்மநாதன், கட்சி சார்பற்ற விவசாய சங்க தலைவர் ஈஸ்வரன், கவுன்சிலர்கள் நாகராஜ், செந்தூர்முத்து, திமுக நிர்வாகி சிவபாலன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இந்நிகழ்ச்சியையொட்டி தீரன் சின்னமலை படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

இதில், மாநில தலைவர் கொங்கு வி.கே.முருகேசன் பேசுகையில்,``கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலையின் வரலாறு மறைக்கப்பட்டது. ஆனால் இன்று ஆங்கிலேயர்களை எதிர்த்து இந்திய சுதந்திரத்திற்கு எதிராக போராடிய தீரன் சின்னமலையின் முழு வரலாற்றையும் இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்த்த பெருமை மேற்கு மண்டலத்தை சேர்ந்த தலைவர்களை சாரும். கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் பெரிய தொழில்களை செய்து வந்தாலும், சிறிய அளவிலாவது விவசாயம் செய்ய வேண்டும். மேலும் விவசாயத்தின் முக்கியத்துவத்தை குழந்தைகள் மற்றும் இளைய தலைமுறையினருக்கு எடுத்து கூற வேண்டும். விவசாயிகள் நன்றாக இருந்தால்தான் நாடு முன்னேறும்’’ என்றார்.

மாநில பொதுச்செயலாளர் கொங்கு எம்.ராஜாமணி பேசுகையில்,``தியாகி தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு பதிலாக வீரவணக்கம் செலுத்துவதே பெருமையாக இருக்கும். தீரன் சின்னமலை போன்ற தியாக செம்மல்களின் தியாகங்களை என்றுமே நினைவு கூற வேண்டும். விவசாயிகளின் உரிமைகளுக்காக கொங்குநாடு விவசாயிகள் கட்சி குரல் கொடுக்கும்’’ என்றார். இதில் கொங்குநாடு விவசாயிகள் கட்சி நிர்வாகிகள் கருப்பசாமி, பன்னீர்செல்வம், நல்லசிவம், தண்டபானி, செல்லமுத்து, ரமேஷ் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், பல்வேறு கட்சி நிர்வாகிகள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். மேலும் திருப்பூரில் தீரன் சின்னமலை சிலை அமைக்க தமிழக அரசு  மற்றும் திருப்பூர் மாநகராட்சியிடம் அனுமதி கோருவது, அந்த சிலையை முதல்வர்  மு.க.ஸ்டாலினை திறந்து வைக்குமாறு வேண்டுகோள் வைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

தீரன் சின்னமலையின் நினைவு நாள்  கடந்த ஆண்டு வரை அரசு விழாவாக ஓடாநிலையில் சிறப்பாக அனுசரிக்கப்பட்ட  நிலையில் இந்த ஆண்டு நிகழ்ச்சி திருப்திகரமாக இல்லை. பல ஊர்களில் பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. எனவே, அடுத்த ஆண்டு முதல்  முறையாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அரசு விழாவாக கொங்கு சமுதாய மக்கள்  மட்டுமின்றி, அனைத்து சமுதாய மக்களும் சிறப்பாக நடத்த தமிழக அரசுக்கு  கோரிக்கை விடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஏப்ரல்  17ம் தேதி தீரன் சின்னமலை பிறந்தநாளில் அவருடைய வரலாற்று புத்தகத்தை  வெளியிடுவது, தியாகி பொல்லானின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்க அரசுக்கு  கோரிக்கை வைப்பது, 360 பக்கத்தில் உருவாகி உள்ள பொன்னர் சங்கர் புத்தகத்தை  முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுமாறு வேண்டுகோள் விடுப்பது, விவசாயிகளிடம்  இருந்து கொள்முதல் செய்யப்படும் வெங்காயம் உள்பட அனைத்து பொருட்களுக்கு  நல்ல விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட  தேங்காய் மட்டைகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அதிக அளவு தேங்கி  கிடக்கிறது. எனவே அதை மீண்டும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என கோரிக்கை விடுப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: