×

ஈக்களால் சுகாதார சீர்கேடு அன்னூரில் முட்டைக்கோழி பண்ணைகளில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

அன்னூர்,ஆக.4: கோவை மாவட்டம், அன்னூர் பேரூராட்சியில் பத்துக்கும் மேற்பட்ட முட்டை கோழி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட முட்டை கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த பண்ணைகளில் கோழிக்கழிவுகளை உடனுக்குடன் அகற்றாததால் சுகாதார கேடு ஏற்படுகிறது. ஈக்கள் அதிகரித்துள்ளன என நீண்ட நாட்களாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். இந்நிலையில் நேற்று கோவை மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் லாவண்யா மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் குமாரபாளையம், சொக்கம்பாளையம் பகுதியில் உள்ள கோழிப் பண்ணைகளில் ஆய்வு செய்தனர்.

கோழிப்பண்ணைகள், பண்ணை நடத்துவதற்கு தேவையான உரிமங்களை பெற்றுள்ளனரா? என்று விசாரித்தனர். எவ்வளவு கோழிகள் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. ஈக்களை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கிறீர்கள்? என கேட்டனர். இதை அடுத்து கோழிப்பண்ணையாளர்களை உரிமங்கள் மற்றும் ஈக்களை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆவணங்களுடன், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்துக்கு வரும்படி தெரிவித்தனர். சொக்கம்பாளையம் அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர்கள், ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அங்குள்ள பொதுமக்கள் அதிகாரிகளிடம் பேசுகையில்\” ஈக்கள் அதிகரிப்பால் வீட்டில் கதவு, ஜன்னல் ஆகியவற்றை திறந்து வைக்க முடிவதில்லை. தண்ணீர், உணவு பண்டங்கள் ஆகியவற்றில் ஈக்கள் விழுகின்றன. இது குறித்து பல மாதங்களாக புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இனியாவது ஈக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதிகாரிகள் ஆய்வில் பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், கவுன்சிலர்கள், பேரூராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலை ரோந்து போலீசார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : Pollution Control Board ,Annoor ,
× RELATED ஈஷா யோகா மையத்திலிருந்து...