×

போலீசார் விசாரணை மருத்துவ தொழில்நுட்ப ஜவுளிகளை சோதனை செய்ய தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி மையத்தை ரூ.25 கோடியில் மேம்படுத்த திட்டம்


பீளமேடு, ஆக.4:  மருத்துவ தொழில்நுட்ப ஜவுளிகளை சோதனை செய்யும் வகையில், கோவையில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி மையம் ரூ. 25 கோடியில் மேம்படுத்தப்படுகிறது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில் நூற்பாலைகள் அதிகம் இருந்ததால் மில்களின் மேம்பாட்டுக்காக தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி மையம் (சிட்ரா) கோவை அவினாசி சாலையில் விமான நிலைய சந்திப்பு அருகே கடந்த 1956ம் ஆண்டு அமைக்கப்பட்டது. மில்களுக்கு தேவையான புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள், புதிய தொழில் முனைவோர்களுக்கான பயிற்சி மையம் போன்றவை இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது, உலகம்   முழுவதும் மருத்துவ தொழில்நுட்ப ஜவுளிகளுக்கு (மெடிக்கல் டெக்னிக்கல் பேப்ரிக்) அதிக தேவை உள்ளது. இதைத்தொடர்ந்து, அதற்கான சோதனை மையம் சிட்ராவில் அமைக்கப்பட்டது. இங்கு சில மருத்துவ தொழில்நுட்ப ஜவுளிகள் சோதனை செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.  சிட்ரா மையம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மையமாகும். அந்த மையம் வழங்கும் சான்றிதழ் இருந்தால்தான் மருத்துவ தொழில்நுட்ப ஜவுளிகளை வெளிநாடுகளுக்கு  ஏற்றுமதி செய்ய முடியும். தற்போது,  மேலும் சில மருத்துவ தொழில்நுட்ப ஜவுளிகளை சோதனை செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி தருமாறு ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி மைய (சிட்ரா) இயக்குனர் பிரகாஷ் வாசுதேவன் கூறியதாவது: தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி மையம் 8 ஆண்டுக்கு முன்பு மேம்படுத்தப்பட்டது. தற்போது டயாப்டர்ஸ், பி.பி.இ. கிட், முகக்கவசம், கையுறைகள், நாப்கின் உள்பட சில மருத்துவ தொழில்நுட்ப ஜவுளிகளின் தரத்தை சோதனை செய்து சான்றிதழ் அளிக்கிறோம். அந்த சான்றிதழ் இருந்தால் தான் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். ஆனால், இன்று நிறைய மருத்துவ தொழில்நுட்ப ஜவுளிகள் வந்து விட்டன. அவற்றை இங்கு சோதனை செய்ய முடியாது. உதாரணத்துக்கு  இருதய வால்வு தயாரிக்க உதவும் ஒரு விதமான துணி, இருதயத்தில் துளை இருந்தால் அதை அடைக்க உதவும் துணி, வைரசில் இருந்து மருத்துவர்களை பாதுகாக்கும் துணி ஆகியவற்றின் தரத்தை சோதனை செய்யும் வசதி வேண்டும்.  மருத்துவத்துக்காக பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அந்த பிளாஸ்டிக்கும்  மண்ணில் மக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அந்த பிளாஸ்டிக்கின் தரத்தை சோதனை செய்யும் வசதி, டிரஸ்சிங் துணியை சோதனை செய்யும் வசதி போன்ற வித்தியாசமான புதிதாக கண்டுபிடிக்கப்படும் மருத்துவ தொழில்நுட்ப ஜவுளிகளின் தரத்தை சோதனை செய்யும் வசதி இங்கு ஏற்படுத்தப்பட வேண்டும். ஆனால், அந்த ஜவுளிகள் தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்டாலும் அவற்றை வெளிநாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு  அனுப்பித் தான் அதன் தரத்தை சோதனை செய்து சான்றிதழ் பெற வேண்டியுள்ளது. இதனால், கால தாமதம் மற்றும் செலவுகள் அதிகமாகிறது. எனவே, அந்த சான்றிதழை சிட்ராவிலேயே பெறும் வகையில் கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க  வேண்டியுள்ளது. அதற்கு இந்த மையத்தை மேம்படுத்துவது அவசியமாகிறது.

இதற்கு ரூ.25 கோடி செலவாகும் என்று முடிவு செய்து அதற்கான கருத்துருவை ஒன்றிய அரசுக்கு அனுப்பியுள்ளோம். சமீபத்தில் கோவை வந்த ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயலிடம் இதுதொடர்பான கோரிக்கை வைத்துள்ளோம். அவர் இந்த மையத்தை சுற்றி பார்த்து விட்டு ஆவன செய்வதாக கூறியுள்ளார். இந்த கட்டமைப்புகளை ஏற்படுத்தி விட்டால் தெற்காசியாவிலேயே மருத்துவ தொழில்நுட்ப ஜவுளிகளுக்காக மட்டும் அவற்றின் தரத்தை சோதனை செய்யும் ஒரே பிரத்யேக மையம் சிட்ரா மட்டும் தான் என்ற நிலை ஏற்படும்.

 கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா தொற்று பரவ தொடங்கிய போது டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அணிந்து கொள்ளும் கவச உடையின் (பி.பி.இ) தரத்தை சோதனை செய்யும் மையம் இந்தியாவில் இல்லை. இதனால் வெளிநாடுகளுக்கு அனுப்பி சான்றிதழ் பெற்றால் தான் ஏற்றுமதி செய்ய முடியும். ஆனால்,  உலக நாடுகளில்  முழு ஊரடங்கு அமலில் இருந்ததால் அந்த நாடுகளுக்கும் சாம்பிள்களை அனுப்ப முடியவில்லை.
இதைத்தொடர்ந்து,  சர்வதேச தரத்தின் அடிப்படையில் இந்த மையத்திலேயே அதற்கான சோதனை செய்யும் எந்திரங்களை தயாரித்தோம். அந்த எந்திரங்களை கொண்டு இந்தியாவில் தயாரித்த பி.பி.இ. கிட்களை சோதனை செய்து சான்றிதழ் வழங்கினோம். அதன் பின்னர் தான் அவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

Tags : South Indian Textile Research Center ,
× RELATED சிறை மெகா அதாலத்தில் 16 கைதிகள் விடுதலை