×

ஆடிப் பண்டிகையையொட்டி பவானிசாகர் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஆடிப்பாடி உற்சாக கொண்டாட்டம்

சத்தியமங்கலம், ஆக.4: ஆடி பண்டிகையை முன்னிட்டு பவானிசாகர் அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பவானிசாகர் அணை முன்பு 15 ஏக்கர் பரப்பளவில் அணைப்பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் படகு இல்லம், ஊஞ்சல், சறுக்கு, சிறுவர் ரயில், கொலம்பஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு சாதனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், பார்வையாளர்கள் ஓய்வெடுப்பதற்காக அழகிய புல்தரைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று ஆடிப் பண்டிகை என்பதால் பவானிசாகர் அணை பூங்காவிற்கு ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். பூங்கா முன்பு பொதுப்பணித்துறையினர் வழங்கிய நுழைவுச்சீட்டை பெற்றுக் கொண்டு பூங்காவிற்குள் சென்று சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஆடிப்பாடி, விளையாடி மகிழ்ந்தனர். சிறுவர், சிறுமியர் ஊஞ்சல், சறுக்கு, சிறுவர் ரயில், கொலம்பஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு சாதனங்களில் விளையாடி பொழுது போக்கினர். பண்டிகை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் கூட்டம் அதிகரித்ததால் போலீசார் மற்றும் பொதுப்பணி துறையினர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆடி பண்டிகை தினம் என்பதால் பவானிசாகர் அணை முன்புறம் உள்ள சாலையில்  வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags : Adipadi ,Bhavanisagar dam park ,Adip ,
× RELATED போதையில் தாய், மகளை தாக்கிய தந்தை கைது