கோபி அருகே உள்ள இந்திராநகர் பூங்கா, படகு இல்லத்தில் குவிந்த பயணிகள்

கோபி, ஆக.4:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த ஆண்டு பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. இதனால் கொடிவேரி அணைக்கு வருகை தந்த திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கோபி திருப்பூர் சாலையில் வேட்டைகாரன் கோயிலில்  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்திராநகர் பூங்கா மற்றும் படகு இல்லத்திற்கு சென்றனர். குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் சென்ற ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பூங்காவில் ஆடி பாடி மகிழ்ந்தும், அங்குள்ள இயற்கை சூழலில் செல்போனில் புகைப்படங்கள் எடுத்தும் குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதியில் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர். அதைத்தொடர்ந்து அங்குள்ள படகுசவாரி மையத்தில் குடும்பம் குடும்பமாக மோட்டா் படகில் சவாரி செய்து மகிழ்ந்தனர். சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியில் அரசு சார்பில் வழங்கப்பட்டு உள்ள மோட்டார் படகில் குடும்பம் குடும்பமாக சவாரி செய்து மகிழ்ந்தனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும் போது, ‘ஆடிப்பெருக்கை முன்னிட்டு கொடிவேரி அணை, பவானிசாகர் அணைக்கு செல்வதற்காக வந்த போது அணைகள் மூடப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல முடிவு செய்தோம். அப்போது தான் இந்திரா நகர் ஏரியில் உள்ள படகு சவாரி குறித்து தகவல் அறிந்து இங்கு வந்து மிகவும் மகிழ்ச்சியுடன் தி்ரும்பி செல்வதாக கூறினர்.

Related Stories: