ஒன்றிய துணை தலைவர் திடீர் தர்ணா

கடலூர், ஆக. 4:கடலூர் ஊராட்சி ஒன்றியம் திருவந்திபுரம் ஊராட்சியில், குடிநீர் தட்டுப்பாட்டை தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் ஒன்றிய அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தேமுதிகவை சேர்ந்த ஒன்றிய துணை தலைவர் ஐயனார் திடீரென ஒன்றிய அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். வாயில் கருப்பு துணி கட்டி காலி குடத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றிய குழு தலைவர் தெய்வ பக்கிரி போராட்டத்தில் ஈடுபட்ட துணை தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர், திருவந்திபுரம் ஊராட்சிக்குட்பட்ட மலைச்சந்து, மனவெளி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஏழு மாதமாக குடிநீர் கிடைக்கவில்லை. இது சம்பந்தமாக ஊராட்சி மன்ற தரப்பினரிடமும், ஒன்றிய அலுவலகத்திலும் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே அடிப்படை தேவையான குடிநீரை வழங்குவதற்கு வழி காண வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக  தீர்வு காணப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றிய குழு தரப்பினர் எடுத்துரைத்ததை தொடர்ந்து ஐயனார் போராட்டத்தை கைவிட்டு, கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றார்.

Related Stories: